சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான படம் 'பாபா'. அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்.
கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், அதிகம் பரவலாக பேசப்பட்டிருந்தது. குறிப்பாக இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு பாபா திரைப்படம், புது பொலிவுடன் திரை அரங்குகளில் மீண்டும் ரிலீஸ் ஆகி உள்ளது. முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
சில காட்சிகள் இணைக்கப்பட்டு டப்பிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், ரீ ரிலீசிற்கு அமோக வரவேற்பையும் மக்கள் அளித்துள்ளனர். அப்படி ஒரு சூழலில், முதல் காட்சி மற்றும் கிளைமேக்ஸில் உள்ள மாற்றம் தொடர்பான செய்தி, தற்போது அதிக கவனம் பெற்று வைரலாகியும் வருகிறது.
பழைய பாபா படத்தின் அறிமுக பாடலுக்கு முன்புள்ள சில காட்சிகள் ட்ரிம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதே போல, இறுதிக் காட்சியில், இமயமலையில் பாபாவை பார்த்து விட்டு திரும்பும் ரஜினி மீண்டும் பாபாவிடமே செல்லும் எண்ணத்தை மாற்றிக் கொள்வது போல இருக்கும். ஆனால் தற்பொழுது ரீ ரிலீசான பாபாவின் கிளைமேக்ஸ் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி பாபாவிடம் ரஜினி தன்னை சிஷ்யனாக ஏற்க சொல்லி கேட்க அதற்கு பதில் சொல்லும் பாபா, "நான் வைத்த பரீட்சையில் நீ ஜெயிச்சுட்ட. ஆனா உன் தாயை நோகடிச்சி இருக்க. என்னதான் தான தர்மம் செய்தாலும் தாயை சந்தோஷமா வச்சுக்கலைன்னா மோட்சம் கிடைக்காது. அடுத்த ஜென்மத்துல அதே தாய்க்கு மகனா பிறந்து அவருடைய எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுனா அந்த மாயவலை தானா விலகிடும். அப்ப நானே உன்னை அழைக்கிறேன்" என பாபா கூறும் படியாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கிளைமேக்ஸ் காட்சி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டும் வருகிறது. மேலும் இந்த புது கிளைமேக்ஸ் காட்சியில் தான் ரஜினிகாந்த் டப்பிங் பேசி இருப்பார் என்றும் கருதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.