44 செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னை மகாபலிபுரம் பூஞ்சேரியில் வைத்து நடைபெற உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று இருந்தது. இந்தியாவில் வைத்து முதல் முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடர் இது தான்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழர் முதல்வர் முக ஸ்டாலின், தமிழக அரசு 44 வது செஸ் ஒலிம்பியாட், தமிழகத்தில் நடப்பதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள் மற்றும் உழைப்புகள் தொடர்பாக பேசியிருந்தார். அதே போல பிரதமர் மோடியும், செஸ் மற்றும் தமிழகத்தின் பெருமை பற்றி மேடையில் பேசி இருந்தார்.
அதே போல, இந்த தொடக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றிருந்தது. இந்தியாவின் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக நடன நிகழ்ச்சிகளும், ஓவியம் தொடர்பான நிகழ்ச்சிகளும், இசை கச்சேரியும் நடைபெற்று இருந்தது. இவை அனைத்துமே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. மேலும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், நடிகர் ரஜினிகாந்த், கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது தந்தை ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா, "அப்பாவுடன் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டேன்" என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள், தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.