டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ‘கொரில்லா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மே.24) சென்னையில் நடைபெற்றது.
‘கீ’ திரைப்படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் ‘கொரில்லா’, ‘ஜிப்ஸி’ ஆகிய திரைப்படங்களின் அனைத்து பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. இந்நிலையில், ‘கொரில்லா’ திரைப்படம் வரும் ஜூன்.21ம் தேதி ரிலீசாகவுள்ளது. இப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராதாரவி, யோகிபாபு, சதீஷ், ராம்தாஸ், மொட்டை ராஜேந்தர், ராகுல் தாத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். காமெடி த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜீவாவுடன் பயிற்சியளிக்கப்பட்ட சிம்பான்சி குரங்கு ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் ராதாரவி, ‘ஜீவா யாருக்குமே போட்டி கிடையாது. மிகச்சிறந்த நடிகர். அவரை பற்றி தைரியமாக பேசலாம் மற்றவர்களை பற்றி பேச கொஞ்சம் பயமாக இருக்கிறது. பேசும் மொழி, உடல் மொழி என படத்துக்கு படம் வித்தியாசம் காட்டுபவர் நடிகர் ஜீவா. எந்த இயக்குநருக்கு, எந்த தயாரிப்பாளருக்கு எப்படி நடித்துக் கொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார். மனிதர்களை வைத்து படம் எடுப்பதே சிரமம், ஆனால் இந்த படத்தில் குரங்கை வைத்து படம் எடுத்திருக்கிறார்கள். அதற்கே தைரியம் வேண்டும்.
மேலும், தேர்தல் வெற்றி குறித்து பேசிய அவர், தனது தந்தையின் வசனம் ஒன்றை நினைவுக் கூர்ந்தார். அவர் பேசுகையில், ‘நீங்கள் எல்லோரும், தமிழ் நாட்டு மக்கள் மாதிரி இருக்கிறீர்கள், எனக்கு தெரிந்து முதன்முறையாக அனைத்து கட்சிக்காரர்களும் வெடி வைத்து வெற்றியை கொண்டாடினர். எனக்கு அரசியல் தெரியாது, ஒரு பொது ஜனமாக இருந்து இந்த தேர்தலை நான் பார்த்தேன்’.
‘இதை பார்க்கும் போது ‘நல்லவன் வாழ்வான்’ என் தந்தை பேசிய வசனம் நினைவிற்கு வருகிறது. அதில் புரட்சிதிரைப்படத்தில் தலைவர் எம்.ஜி.ஆரும், எனது தந்தையும் எதிரெதிர் அணியில் போட்டியிடுவார்கள். அதில் புரட்சி தலைவர் ஜெயித்துவிடுவார். தொண்டர்கள் புரட்சி தலைவரையும் தூக்கிக் கொண்டு ஜே!ஜே! என முழக்கமிடுவர், என் தந்தையையும் தூக்கிக் கொண்டு ஜே!ஜே! என முழக்கமிடுவர். அப்போது சொல்வார், யாரு ஜெயிச்சா யாரு தோத்தா..? தோத்தவனுக்கும் ஜே போடுறீங்க ஜெயிச்சவனுக்கும் ஜே போடுறீங்க.. என்ன நாடு டா இது..?’ எனும் நடிகவேல் எம்.ஆர்.ராதாவின் வசனத்தை ராதாரவி நினைவுக் கூர்ந்தார்.