தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இதனிடையே வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். தொடர்ந்து, ஆறாவது பிக் பாஸ் சீசனின் கடைசி நாமினேஷனும் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்ட சிலரும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த ரச்சிதா, நேயர்களுக்காக லைவில் தோன்றி இருந்தார். இதில், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் சக போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
இதில் ராபர்ட் மாஸ்டர் பற்றி பேசிய ரச்சிதா, "அவர் நடந்து வந்த பாதையில் அவர் அப்படித் தான்னு கொஞ்ச நாளுக்கு அப்புறம் தான் நான் புரிஞ்சுகிட்டேன். ரொம்ப ஒரு குழந்தைத்தன்மையா இருக்கும் அவர் பண்ற சில சேட்டைகள், விஷயங்கள் எல்லாம். இந்த மாதிரி ஒரு கேரக்டர் நம்ம நார்மல் லைஃப்லயும் சந்திப்போம். இந்த கலாய்ச்சிட்டு, கிண்டல் பண்ணிக்கிட்டு எல்லாம் அந்த மாதிரி தான் ராபர்ட் மாஸ்டர்.
நிறைய தடவை என்கிட்ட திட்டு வாங்கி இருக்காங்க, நிறைய வாட்டி மொறைச்சு இருப்பேன். இருந்தாலும் அவர் அப்படியே தான் இருக்காரு. ரொம்ப கிண்டல் பண்ணி, என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணி ஆனா அது க்யூட்டா இருந்துச்சு. ராபர்ட் மாஸ்டர் ஒரு குழந்தை தன்மை இருக்கிற ஒரு பெரியவர் " என சிரித்துக் கொண்டே ரச்சிதா கூறினார்.