இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூவர் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் முடிந்தது.
நான்கு வருட இடைவெளி
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் பல துறைகளில் முத்திரைப் பதித்தவர் உலகநாயகன் கமல்ஹாசன். சினிமா சம்மந்தமாக எந்தவொரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை உடனடியாக தன்னுடைய படங்களில் பயன்படுத்தி தமிழ் சினிமாவை எப்போது முன்னெடுத்து செல்லும் முன்னத்தி ஏராக செயல்பட்டவர். 2018 ஆம் ஆண்டு விஸ்வரூபம்-2 படம் கமல் நடிப்பில் வெளியானது. அதன் பிறகு அவரின் அடுத்த படமாக விக்ரம் உருவாகி வருகிறது.
அரசியல் மற்றும் இந்தியன் 2
மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி கமல்ஹாசன் சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார். கட்சிப் பணிகள் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வந்த அவர், இந்தியன் 2 படத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் இன்னும் முடியாமல் உள்ளது. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்திலும் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தார். அவரின் தொகுத்து வழங்கும் திறமைக்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளுக்காக, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணியில் இருந்து விலகுவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
லோகேஷுடன் கூட்டணி:
ஆனாலும் கமல்ஹாசனை திரையில் பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கம் சினிமா ரசிகர்களுக்கு இருந்துவந்தது. அந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை அவரின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. படத்தில் கமலைத் தவிர விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் நரேன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
விக்ரம் படப்பிடிப்பு
ஒரு டீசர் வீடியோவை கடந்த ஆண்டு வெளியிட்டு படத்துக்கான எதிர்பார்ப்பை எகிறவைத்தார் லோகேஷ். அதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கொரோனா பாதிப்புகளால் அவ்வப்போது படப்பிடிப்பில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூன்று பிஸியான நடிகர்களை வைத்து மும்முரமாக படப்பிடிப்பை நடத்திவந்தார் லோகேஷ். மொத்தமாக 110 நாட்கள் நடந்த படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னதாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
விக்ரம் ரிலீஸ் எப்போது?
இதையடுத்து படத்தின் டீசர் அல்லது டிரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்தான அறிவிப்பு ’மார்ச் 14 ஆம் தேதி காலை 7 மணிக்கு அறிவிக்கப்படும்’ எனக் கூறப்பட்டுள்ளது. நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கமலை திரையில் ஆவலாக உள்ள ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.'