கொரோனா பிரச்சனை உலகையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்க, சென்னையிலும் அதன் தாக்கம் மோசமாக உள்ள நிலையில், இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. லாக்டவுன் எப்போதுதான் முடியும் என்று அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சகஜ நிலை வந்த பின் சிரமின்றி இயங்குவதற்கான ஏற்பாடுகளை சில துறைகள் செய்து வருகின்றனர். அதிலொன்றுதான் தியேட்டர்கள்.
மாஸ்டர் சூரரைப் போற்று, டாக்டர் உள்ளிட்ட சில படங்கள் ஷூட்டிங் முடிந்து இறுதிகட்ட பணிகளில் சிக்கியுள்ளது. லாக்டவுன் முடிந்ததும் அப்படங்கள் ஒவ்வொன்றாய் தியேட்டரில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மாஸ்டர் படம் ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன்,சாந்தனு, கெளரி கிஷன், ரம்யா சுப்ரமணியன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்க, வெளியீட்டு மொத்த உரிமையையும் லலித் பெற்றுள்ளார்.
சென்னையில் பல இடங்களில் உள்ள பிவிஆர் தியேட்டர்களின் இணை இயக்குனர் சஞ்சீவ் பிஹைண்ட்வுட்ஸுக்கான நேர்காணலில் மக்களுக்கு தோன்றக் கூடிய அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.
லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்கள் எப்படி இயங்கும் என்பதிலிருந்து, பிஸிகல் டிஸ்டென்ஸ் எப்படி கடைப்பிடிக்கப்படும், டிக்கெட்டுகளை எப்படி வாங்குவது என்பது வரை விளக்கமாக கூறியுள்ளார். சென்னையைப் பொருத்தவரையில் டிக்கெட்டுக்களை வழக்கம் போல ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது டிக்கெட் நியூ உள்ளிட்ட நிறுவனங்கள் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம். பாக்ஸ் ஆபிஸில் நேரில் சென்று, தியேட்டரில் வாங்குவதென்றால் போதிய இடைவெளி விட்டு க்யூவில் திரையரங்கப் பணியாளர்களின் அறிவுறுத்தல்களின்படி வாங்கிக் கொள்ளலாம்.
தியேட்டருக்குள்ளும் ஒருவர் உட்கார்ந்தால் அவருக்கு வலது பக்கமும் இடது பக்கமும் உள்ள சீட்கள் காலியாக இருக்கும். தியேட்டர்களின் இயக்கம் சார்பாக இப்போதைக்கு எடுக்கப்பட்ட முடிவுகளை அரசுக்கு பிவிஆர் நிறுவனம் பரிந்துரை அனுப்பியுள்ளது. முறையான அனுமதி கிடைத்தபின் இவற்றை பின்பற்ற முடிவு செய்துள்ளனர்.
மேலும் சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.