விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'கலக்கப் போவது யாரு', 'அது இது எது' உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், புகழ் தோன்றி இருந்தாலும், அதனை விட அவரை உச்சத்திற்கு கொண்டு சேர்த்த நிகழ்ச்சி என்றால் அது 'குக் வித் கோமாளி' தான்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகமாக, பின்னர் திரைப்படங்களிலும் எண்ட்ரி கொடுத்தார். அதன்படி, குக் வித் கோமாளி அஷ்வினுடன் இணைந்து, ‘என்ன சொல்ல போகிறாய்’, சந்தானம் நடித்த ‘சபாபதி’, அஜீத் நடித்த ‘வலிமை’, சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’, அருண் விஜய்யின் ‘யானை’ ஆகிய திரைப்படங்களில் புகழ் நடித்தார்.
தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் புகழ், Mr Zoo Keeper என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இதனிடையே, 5 வருடங்களாக, தான் காதலித்து வந்த பென்ஸ் ரியா (எ) பென்ஸி எனும் பெண்ணை புகழ் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில்தான் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்த, ஆகஸ்ட் 16, 1947 படத்தில் நடித்துள்ள புகழ், தன் மனைவி தந்த ஊக்கம் பற்றி பிஹைண்ட்வுட்ஸில் பேசியுள்ளார்.
A.R. Murugadoss production மற்றும் Purple Bull Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ஆகஸ்ட் 16, 1947 படத்தின் முதல் பார்வை வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரசிகர்கள் படம் குறித்த செய்திகளுக்காக ஆவலுடன் காத்திருந்தனர். அதன்பிறகு இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தில், இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டனர். கௌதம் கார்த்திக் மற்றும் அறிமுக நடிகை ரேவதி நடிப்பில், இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில், ஒரு தொலைதூர கிராமத்தில் ஒருவன் பிரிட்டிஷ் படைகளுடன் போராடும் கதையை இப்படம் சொல்கிறது.
டிராமா, உணர்ச்சி மிகு தருணங்கள், காதல் மற்றும் பெரிய அளவிலான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த டீசர், பார்வையாளர்கள் அனைவரிடத்திலும், தேசிய உணர்வு மற்றும் பெருமையுடன் அவர்களின் உணர்வுகளை தூண்டும் ஒரு சிலிர்ப்பான பயணத்தை தரும்படி அமைந்துள்ளது. Purple Bull Entertainment வழங்கும், A.R. Murugadoss production சார்பில், “ஆகஸ்ட் 16, 1947” படம் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் புரொமோஷன் தொடர்பான சிறப்பு பேட்டியில் பிஹைண்ட்வுட்ஸில் பேசிய நடிகர் புகழ், “இன்றைக்கு இருப்பது டிஜிட்டல் உலகம். முந்தைய காலங்களை போல் இல்லை. இங்கு எல்லோரும் கருத்து சொல்ல முடியும். நமக்கு கமெண்ட்களில் அப்படி நிறைய கருத்துக்கள் வரும். அவற்றை எப்படி எதிர்கொள்வது என எண்ணும்போதெல்லாம் என்னுடைய மனைவி எனக்கு ஊக்கம் அளிப்பார். நானும் அவரிடம் இங்கு குறித்த நிதர்சனத்தை விளக்குவேன். எனினும் நாம் ஒரு விஷயம் செய்ய நினைத்தால் அதை தடுப்பதற்கும், நாம் வீழ்வதற்கும் நினைக்கும் பலர் இருக்கிறார்கள்.
இதன் காரணமாக நான் சோர்ந்து போகும் போதெல்லாம் என் மனைவி இந்த ஆகஸ்ட் 16, 1947 திரைப்படம் வரும். அப்போது அவர்களுக்கு என்னுடைய திறமை தெரியவரும் என்று ஊக்கமளித்துக் கொண்டே இருந்தார். அப்படி ஒரு திரைப்படம் தான் இப்படம். நான் தினந்தோறும் சூட்டிங் முடிந்து இப்படத்தில் பணியாற்றியது குறித்த அனுபவத்தை அவரிடம் பகிர்வேன். அவர் எனக்கு எல்லாமுமாய் இருக்கிறார். நான் அணியக்கூடிய ஆடை முதற்கொண்டு அவர் தேர்வு செய்வது தான்” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.