சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பை பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கருத்து தெரிவித்துள்ளார்.
சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இத்திரைப்படத்தை இயக்குகிறார். கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், ப்ரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடைபெற்று வந்தது.
இதனிடையே, மாநாடு ஷூட்டிங்கிற்கு சிம்பு தாமதமாக வருகிறார், இரண்டு கேரவன் கேட்கிறார் என சில வதந்திகள் பரவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது. 'சிம்பு 16-வது நாளிலிருந்து தாமதமாக வருகிறார் என்று செய்தி வெளியாகிறது. இந்த செய்தி வெளியான அன்று படப்பிடிப்பே ஆறு நாட்கள் தான் நடந்து முடிந்திருந்தது. ஒருநாள் கூட சிம்பு தாமதமாக வரவில்லை. ஷுட்டிங் வராமல் தவிர்க்கவும் இல்லை. காட்சி படமாக்கி முடியும் வரை கேரவேனுக்கும் செல்வதில்லை. அங்கேயே குடையைப் பிடித்து நின்றுகொண்டு நடித்துக் கொடுக்கிறார். அப்படியிருக்கும்போது ரெண்டு கேரவேன் கேட்கிறார் எனவும் செய்தி வெளியிடுகிறார்கள். அதே போல ஹைதராபாத் வர சிம்பு மறுத்துவிட்டார் என்றும் செய்தி வருகிறது. நாளை மறூநாளிலிருந்து சிம்புவுடன் சேர்த்துதான் ஷூட்டிங் நடைபெறவுள்ளது' என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 'நாங்கள் வட்டிக்கு வாங்கி படம் பண்றோம், ஒவ்வொரு தவறான செய்தியும் பணம் தருபவர்களை பதற்றத்திற்குள்ளாக்கும். வேக வேகமாக படக்குழு இயங்கி கொண்டிருக்கிறது. உங்களின் மனதில் இன்னும் சேமிக்கப்பட்டிருக்கும் தவறான கடந்த கால அபிப்ராயங்களாக சிம்பு பற்றியவை இன்னும் இருந்தால் கண்ட்ரோல் ஆல் டெலிட் பட்டனை அமுக்குங்கள். அவரை தன்னியல்பான நடிகராக இயங்க விடுங்கள். தன் ரசிகர்களுக்காக உடல் எடையைக் குறைத்து தன்னை மாற்றிக் கொண்டு சினிமாவை நேசித்துச் செய்யும் மனிதனாக எங்களது படப்பிடிப்பு தளத்திற்கு வந்து செல்பவரைப் பற்றி இனியும் தவறான செய்திகள் வேண்டாம் நண்பர்களே' என அவர் தெரிவித்துள்ளார்.