நடிகர் சிம்பு நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.
இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மேலும், கதாநாயகனாக நடித்துள்ள சிம்பு, 'முத்து' எனும் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, நேற்று (02.09.2022) நடைபெற்றது. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த விழா நடந்த நிலையில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரெய்லர் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் பேசி இருந்த பல சுவாரஸ்யமான விஷயம், இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது. அந்த வகையில், வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் சிம்பு பற்றி மேடையில் பேசிய விஷயங்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த விழாவில் பேசிய வெந்து தணிந்தது காடு திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், "என்னுடைய அருமை தம்பி சிம்பு இந்த திரைப்படத்துக்காக சுமார் 23 கிலோ உடல் எடையை குறைத்து இருக்கிறார்" என்று குறிப்பிட்டு பேசினார். முன்னதாக சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்த 'அட்மேன்' என்கிற வீடியோ வெளியாகியிருந்தது.
இதேபோல் வேல்ஸ் ப்ரொடக்சன் தயாரிப்பில் அடுத்து வரக்கூடிய கொரோனா குமார் திரைப்படத்திலும் சிம்பு தான் நடிக்கப் போகிறார் என்றும் ஐசரி கணேஷ் இந்த விழாவில் குறிப்பிட்டார்.