பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை பிரியா பவானி சங்கர் பேச்சு வைரலாகி வருகிறது.
மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.
இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.
பத்து தல படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.
தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பத்து தல படத்தின் டீஸர் வெளியானது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் பத்து தல படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், இயக்குனர் கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய பிரியா பவானி சங்கர், "இயக்குனர் கௌதம் மேனன் மதிப்பு மிக்கவர். அவர் நடிப்பில் படங்கள் வெளியாகும் போது பயமாக இருக்கும். அவர் படம் இயங்குவதை விட்டுவிடுவாரா? இப்படி நடிக்கிறாரே என இருக்கும். நம் தலைமுறைக்கே காதலிக்க கத்துக் கொடுத்தவர். யார வச்சு கத்துக் கொடுத்தாரோ (சிம்பு) அவரும் இங்கே தான் இருக்கார். கௌதம் மேனன் சார் நீங்க இன்னும் நிறைய படம் இயக்க வேண்டும். " என பிரியா பவானி சங்கர் பேசினார்.