ஐத்ராபாத்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ப்ரியா பவானி சங்கர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான விக்ரம் குமாரை சந்தித்துள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
அலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விக்ரம் குமார், பின் 13B, யாவரும் நலம், மணம், கேங் லீடர், 24 போன்ற படங்களை இயக்கியவர். இவரின் வித்தியாசமான வகைமை படங்களுக்காகவே இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவரின் திரைமொழி, கதை சொல்லும் விதம் இந்திய சினிமாவில் புகழ் பெற்றது.
தற்போது புதிய தெலுங்கு படத்தை இயக்கும் முனைப்பில் விக்ரம் குமார் உள்ளார். இந்த படத்திற்கு கதாநாயகிகளாக மலையாள நடிகை பார்வதி நடிக்க உள்ளார். இவருடன் மற்றொரு நடிகையாக பிரியா பவானி சங்கரும் நடிக்க உள்ளார். பார்வதி ஏற்கனவே தமிழில் மரியான், பூ, உத்தம வில்லன் படங்களில் நடித்துள்ளார். இந்திய அளவில் கவனிக்கப்படும் முன்னணி நடிகையாகவும் செயல்படுகிறார்.
இந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே விக்ரம் குமாரின் மணம் படத்தில் நடித்தவர். இந்த படம் குறித்து பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், பார்வதியின் ரசிகையான எனக்கு அருமையான தருணம்! பார்வதி மீது மிகுந்த அன்பும் மரியாதையும்! முட்டாள் ஆடுகளைப் போல சிரித்துக்கொண்டே இருக்கிறேன், என் உற்சாகத்தின் அளவு உண்மையில் நாக சைதன்யா மற்றும் விக்ரம் சார் மீது உயர்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். கடைசியாக ஒ மணப்பெண்ணே, பிளட் மணி படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல, பொம்மை,ஹாஸ்டல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.