தனது வித்தியாசமான நடிப்பால், மலையாள சினிமாவை தாண்டி, இந்திய சினிமாவிலும் நிறைய ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளவர் நடிகர் பிருத்விராஜ். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களை பிருத்விராஜ் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடித்து, மலையாளத்தில் வெளியான 'ஜன கண மன' மற்றும் 'கடுவ' உள்ளிட்ட திரைப்படங்கள், சமீபத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், நடிகர் பிருத்விராஜின் மனைவியும், தயாரிப்பாளருமானா சுப்ரியா மேனன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் சுப்ரியா மேனன் தனது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சுப்ரியாவுக்கு தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். அது மட்டுமில்லாமல், தனது பிறந்தநாள் தொடர்பாக, இன்ஸ்டாவில் தனது தந்தையை குறிப்பிட்டு, சுப்ரியா பகிர்ந்த பதிவு, இணையத்தில் பலரையும் உருக வைத்துள்ளது.
சுப்ரியா மேனனின் தந்தை, கடந்த 2021 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானார். இதனைத் தொடர்ந்து, தனது தந்தை இல்லாமல், முதல் பிறந்தநாளை கொண்டாடும் சுப்ரியா, தந்தையுடன் இணைந்து நடனமாடும் புகைப்படங்களை வெளியிட்டு, உருக்கமான கருத்து ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அவரது கேப்ஷனில், "ஒவ்வொரு ஆண்டும் எங்கள் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது மிக ஸ்பெஷலாக இருக்கும். புதிய ஆடைகள், பரிசு பொருட்கள், பிறந்தநாள் விழா என இடமே களை கட்டும். அது என்னை ஸ்பெஷலாக உணரவும் வைக்கும். ஆனால், இத்தனை ஆண்டுகள் என்னை ஸ்பெஷலாக உணர வைத்த தந்தை, இந்த முறை இல்லை. அவரது இறப்பை சமாளிக்க முடியாமல், இந்த நாளை கொண்டாடுவதா அல்லது அழுவதா என்பது கூட எனக்கு தெரியவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, தனது திருமணத்திற்கு முன்பு, மெஹந்தி நிகழ்ச்சியில் தந்தையுடன் நடனமாடிய புகைப்படங்களை பகிர்ந்த சுப்ரியா, இது பற்றி கேப்ஷனிலும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.