சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தில் உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து டாக்டர் மற்றும் டான் ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். இதையடுத்து இயக்குனர் அனுதீப் கே வி யின் தெலுங்கு-தமிழ் இருமொழி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகியவற்றின் கீழ் நாராயண் தாஸ் நரங், சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். சோனாலி நரங் படத்தை வழங்குகிறார். எஸ் தமன் இசையமைக்க, அருண் விஸ்வா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷாப்கா நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு
இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் நடந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி படத்தின் டைட்டிலை அறிவித்ததோடு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர். PRINCE என்பது படத்திற்கான தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்து இருந்தனர். ஆனால் பின்னர் ரிலீஸ் தேதி தீபாவளி நாளுக்கு மாற்றப்பட்டுள்ளது. கோபுரம் பிலிம்ஸ் இந்த படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்கிறது.
இந்திய கலாச்சாரம் பற்றி
இந்நிலையில் தற்பொது மரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றில் இந்திய பாரம்பரிய உடையில் இருக்கும் அவர் “இந்திய கலாச்சாரம் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதிலும் குறொப்பாக இந்திய உடைகள்” என தெரிவித்துள்ளார்.