தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டும் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்டார்.
இதனிடையே இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின்படி திமுக முன்னிலையிலும் இதற்கு அடுத்த இடத்தில் அதிமுகவும் இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் அந்த மாவட்டத்தின் ஸ்டார் தொகுதியாக விளங்கும் விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எம்.ஆர்.ராதா கிருஷ்ணன் முன்னிலையில் இருக்கிறார்.
இதே தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் கார்த்திகேயன் அடுத்த இடத்தில் நீடிக்கிறார். அமமுக கூட்டணியில் போட்டியிட்டுள்ள பிரேமலதா பின்னடைவை சந்தித்து வருகிறார். இந்த தொகுதியில் இதற்கு முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 4 முறையும், அதிமுக, திமுக தலா 3 முறையும், தேமுதிக 2 முறையும் பாமக ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.