கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லதா மங்கேஷ்கர் குணமடைய தனது ஆட்டோ முழுவதும் அவரது புகைப்படத்தை ஒட்டி பிரார்த்தைனை செய்யும் ஆட்டோ டிரைவர்.
இந்தியாவின் 'இசைக்குயில்' என வர்ணிக்கப்படுபவர் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர். இவர் தமிழ், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். 92 வயதான லதா மங்கேஷ்கர் பாரத ரத்னா, பத்ம பூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கொரோனா மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக மும்பை மருத்துவமனையில் லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் உடல்நிலை குறித்து எந்தவிதமான தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அண்மையில் செய்தி குறிப்பு வெளியானது.
மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த ஒருவார காலமாக சிகிச்சை பெற்று வரும் லதா மங்கேஷ்கருக்காக அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தற்போது அவர் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில், லதா மங்கேஷ்கரின் சகோதரியும் பாடகியுமான உஷா மங்கேஷ்கர், 'அவருக்கு லேசான கொரோனா தொற்று தான் ஏற்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், வயது மூப்பு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் லதா மங்கேஷ்கர் உடல் நலம் தேறி வீடு திரும்ப பிரார்த்தனை செய்ததும் திரையுலகினரை பிரமிக்க வைத்துள்ளது. மும்பையில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருபவர் சத்யவான். லதா மங்கேஷ்கரின் தீவிர ரசிகரான இவர் தனது ஆட்டோ முழுவதும் அவரது புகைப்படங்களை மட்டுமே ஒட்டியுள்ளார். லதா மங்கேஷ்கரை அவர் சரஸ்வதி தேவியின் வடிவமாக பார்க்கிறார்.
லதா மங்கேஷ்கர் குரலில் வெளியான எவர்கிரீன் பாடல் வரிகளால் ஆட்டோ முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த ஆட்டோவில் தனது சரஸ்வதி தேவி சீக்கிரம் குணமடைய வேண்டும் என எழுதியுள்ளார். ஆட்டோ வருமானத்தை இதற்காகவே சத்யவான் செலவிட்டுள்ளார். லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்த நாள் முதல் மிகுந்த வேதனையுடன் இருப்பதாக சத்யவான் தெரிவித்துள்ளார்.