சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் 'அந்தகன்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் பிரசாந்த் நடிப்பில் 'அந்தகன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை முதலில் ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஜே.ஜே ஃப்ரெட்ரிக் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் இந்த படத்தில் இருந்து இயக்குனர் ஜே.ஜே ஃப்ரெட்ரிக், திரைக்கதையாசிரியர் லட்சுமி சரவணக்குமார் விலகினர். அவர்களுக்கு பதிலாக இந்த படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் பிரசாந்தின் அப்பாவுமான இயக்குனர் தியாகராஜனே இந்த ரீமேக் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
'அந்தாதூன்' படத்தின் ரீமேக் தான் 'அந்தகன்'. கடந்த 2018 ஆம் ஆண்டு, இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் பாலிவுட்டில் 'அந்தாதூன்' திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.
மேலும் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது ஆயூஷ்மான் குரானாவுக்கும், சிறந்த இந்திப் படம், சிறந்த திரைக்கதைக்கு என மூன்று தேசிய விருதுகளையும் 'அந்தாதூன்' திரைப்படம் வென்றது. சுமார் ரூ.34 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூபாய் 460 கோடி வசூல் செய்தது சாதனைப் படைத்தது.
இந்த படத்தில், பிரசாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா நடிக்கின்றனர். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாகவும், படத்தின் டப்பிங், பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை கலைப்புலி தாணுவின் V கிரியேஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படம் விரைவில் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.