உலகநாயகன் கமல்ஹாசன் திரைத்துறையில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் திரைப்பயணத்தை எட்டியிருப்பதை கொண்டாடும் வகையில் ‘கமல் 60’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி அரங்கேறவுள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக 3 நாட்கள் இந்நிகழ்ச்சி கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். அதன் முதற்கட்டமாக, வரும் நவ.7ம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் பரமக்குடியில் அவரது தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைக்கவுள்ளார். மேலும், நவ.8ம் தேதி சத்யம் திரையரங்கில் ‘ஹே ராம்’ படத்தின் சிறப்புக் காட்சியும், அதன் பிறகு கமலுடன் சிறிய உரையாடலும் நிகழ்வுள்ளது.
அதைத் தொடர்ந்து வரும் நவ.17ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்ட இசை நிகச்சி நடைபெறுகிறது. இதில் ரஜினிகாந்த் உட்பட திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்துக் கொள்கின்றனர். இதனிடையே, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகரான குவாலியரில் நடைபெற்று வந்த நிலையில், குவாலியர் கட்ட ஷூட்டிங் பணிகளை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன், இசைஞானி இளையாராஜவை சந்தித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இசைஞானியின் இசை நிகழ்ச்சியில் இளையராஜா மற்றும் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் பாடல்கள் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.