இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. உயிர் கொல்லி நோய் என்பதாலும், அதற்கு இன்னும் தீர்வு காணப்படாததாலும் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
அரசும் மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் நோயின் தாக்கம் குறைந்த பாடில்லை. சமீபத்தில் ஊடகங்களை சந்தித்த தமிழக முதல்வர் கொரோனா வைரஸை எதிர்கொள்ள மக்களின் ஒத்துழைப்பும் முக்கியம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நோயினால் பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் நாள்தோறும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிரபல ஹிந்தி டிவி நடிகை தீபிகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது அம்மா அப்பா டெல்லியில் வசிப்பதாகவும், அம்மாவிற்கு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அம்மாவின் ரிப்போர்ட்டை டெல்லியை சேர்ந்த மருத்துவமனை வழங்காமல், அதனை ஃபோட்டோ எடுக்க மட்டும் அனுமதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார். தங்கள் குடும்பம் கூட்டுக்குடும்பம் என்றும் குடும்பத்தில் 45 பேர் வரை ரிஸ்க்கில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து டெல்லி அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.