நடிகை கங்கனா ரனாவத், இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர்.
சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர். 2008ம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் நடித்து வெளியான 'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக கனிசமாக 20 கிலோ உடல் எடையை கூட்டி நடித்துள்ளார்.
தலைவி படத்தை இயக்குனர் A.L. விஜய் இயக்கியுள்ளார். எம். ஜி. ஆராக அரவிந்த் சாமியும், கருணாநிதியாக நாசரும், ஆர். எம். வீரப்பனாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். திரையரங்கில் வெளியான இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தலைவி படத்தை தொடர்ந்து இப்போது, அவர் தனது சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் அவரது முந்தைய தலைவி படம் வெளியான நான்கு நாட்களுக்குப் பிறகு, "சீதா - தி அவதாரம்" என்ற தலைப்பில் தனது அடுத்த பெரிய படத்தை அறிவித்துள்ளார். இந்த முறை, அவர் எபிக் டிராமா வகைமையில் சீதையாக நடிக்கிறார். அலாவிக் தேசாய் இயக்கும் இந்த படத்தை எஸ்எஸ் ஸ்டுடியோவின் சலோனி சர்மா தயாரிக்கவுள்ளார்.