பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி பாடகி திடீரென மரணம் அடைந்திருக்கிற செய்தி, தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை உலகை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த, ‘சரிகமபா’ பாடல் நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ்பெற்ற பாடகி, ராக்ஸ்டார் ரமணி அம்மாள். இவர் தற்போது உடல்நல குறைவால் காலமாகி இருக்கிற செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
ராக்ஸ்டார் ரமணி அம்மாள் என பிரபலமாக அறியப்பட்ட ரமணியம்மாள் இந்திய நாட்டுப்புறப் பாடகியாவார். திரைப்பட பின்னணி பாடகியாகவும் மிகவும் போராட்டங்களை சந்தித்த பின் பிரபலமானார். 1954 ஆம் ஆண்டு சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் பிறந்த இவர், கடந்த 2017-ஆம் ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல பாடல் நிகழ்ச்சியான சரிகமபா சீனியர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ராக் ஸ்டார் என்கிற புனைப்பெயர் கொண்டு பாடி வந்த ரமணியம்மாள், 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படத்தின் தண்டட்டி கருப்பாயி பாடலை பாடினார். இந்த பாடல் சினிமாவில் அவருக்கு அடையாளம் கொடுத்தது. இதேபோல், கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த பாடல் நிகழ்ச்சி ஒன்றில் முதலிடத்தை பிடித்தார்.
இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து ஜூங்கா, சண்டக்கோழி 2, காப்பான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் பாடக்கூடிய வாய்ப்பை பெற்ற ரமணியம்மாள் வெளிநாடுகள் பலவற்றிலும் நடந்த இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தவிர, தொலைக்காட்சி தொடரான யாரடி நீ மோகினி சீரியலின் ஒரு அத்தியாயத்தில் சிறப்பு தோற்றத்திலும் ரமணியம்மாள் நடித்தார். இந்நிலையில் சுமார் 63 வயது ஆன இவருடைய மரணத்திற்கு திரை, சின்னத்திரை மற்றும் இசையுலகினர் அஞ்சலி செலுத்துகின்றனர்.