நடிகர் சூர்யா தயாரிப்பில் நடிகை ஜோதிகா நடித்திருக்கும் படம் 'பொன்மகள் வந்தாள்'. இந்த படத்தை இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கி இருக்கிறார். கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பொன்மகள் வந்தாள் படம் OTT எனப்படும் ஆன்லைன் தளத்தில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது.
அறிவித்த நாள் முதல் பல சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. ஆனாலும் தன் முடிவில் உறுதியாக இருந்த சூர்யா படத்தை OTT-யில் ரிலீஸ் செய்வது நிச்சயம் என்று முடிவெடுத்தார். இதனையடுத்து பரபரப்பான டிரெய்லர் வெளியானது. அடுத்தடுத்த நடக்கும் கொலைகள், கொலைகளுக்கு பின்னான மர்மம், நீதிக்காக முட்டிக்கொள்ளும் பார்த்திபன், ஜோதிகா என பல டிவிஸ்டுகள் இருந்தது.
இந்நிலையில் பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைம் வீடியோவில் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரிமியர் ஷோவை பார்த்த 'சில்லுக்கருப்பட்டி' படத்தின் இயக்குனர் ஹலிதா ஷமீம் முதல் ஆளாக படத்தை விமர்சனம் செய்துள்ளார்.
அவர் கூறும்போது "ஆன்லைன் பிரிமியர் ஷோவில் படத்தை பார்த்துவிட்டேன். எமோஷனலாக கட்டிப்போடும் கோர்ட் டிராமா. ஜோதிகா மேடம் அவர்களின் நடிப்பு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கிறது. இது மிகவும் முக்கியமான படம். பாதிக்கப்பட்டவர்களை தைரியமாக குரல் கொடுக்க தூண்டும். அருமையான படைப்பு. இயக்குனர் பெட்ரிக் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.