தென்காசி பகுதியைச் சேர்ந்த பிரபல இயக்குனர் பாபா விக்ரம். தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வந்த இவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான, 'கண்ணம்மா' என்னும் படத்தை இயக்கி தயாரித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் மீனா, பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, கருணாஸ், கோவை சரளா, நாசர், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்த 'பொம்மை நாய்கள்' என்ற படத்தையும் பாபா விக்ரம் தயாரித்து இயக்கி இருந்தார்.
மறைந்த பாபா விக்ரம்
தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன், தென்காசியை அடுத்த ஆழ்வார்குறிச்சி பகுதியில் பாபா விக்ரம் வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே, சமீப காலமாக உடல்நலக் குறைவால், பாபா விக்ரம் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை (08.04.2022) அவரது மறைந்து போன சம்பவம், தமிழ் சினிமா வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாத்துறையினர் இரங்கல்
இன்று காலை (09.04.2022) சுமார் 11 மணியளவில், பாபா விக்ரமின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆழ்வார்குறிச்சியில், 'அன்ன பாபா ஆலயம்' என்ற பெயரில் சாய்பாபாவுக்கு ஆலயம் ஒன்றை நிறுவிய பாபா விக்ரம், அதற்கு வழிபாடு செய்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் பாபா விக்ரமின் மறைவுக்கு தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.