பிரபல மலையாள நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கலாபவன் ஜெயேஷ் (44) நேற்று (மே 10) காலமானார். கடந்த ஒரு வருட காலமாக கேன்சர் நோயுடன் போராடி சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி திருச்சூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஞாயிறு மாலை காலமானார்.
லால் ஜோஷ் இயக்கத்தில் 'முல்லா' என்ற படத்தில் அறிமுகமான ஜெயேஷ் அதன்பின், 'பயணிகள்', 'கிரேஸி கோபாலன்', 'ப்ரீதம் -2', 'எல்சம்மா என்னா ஆண்குட்டி', சால்ட் அண்ட் பெப்பர், சு சு சுதி வாத்மீகம் உள்ளிட்ட பல படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்தார். அவரது இயல்பான நடிப்பும் காமெடியும் மல்லுவுட்டில் அவருக்கான இடத்தைப் பெற்றுத் தந்தது. தவிர கடந்த இருபது ஆண்டுகளாக மிமிக்ரி மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார் ஜெயேஷ்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயேஷின் மகன் சித்தார்த் இறந்துவிட்டார். அவருக்கு சுனஜா என்ற மனைவியும், ஷிவானி என்ற மகளும் உள்ளனர்.
ஜெயேஷின் திடீர் மறைவினால் அதிர்ச்சி அடைந்த மலையாளத் திரையுலகம் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறது. அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். ஜெயேஷின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.