கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார். கடைசியாக நெல்சன் இயக்கிய Beast படத்தில் விஜய் திரையில் காணப்பட்டார். Beast திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.
Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாவதாக கூறப்படும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் கேங்ஸ்டர் வகைமையில் உருவாக உள்ளது என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.
இந்த படத்தின் ஆரம்பக் கட்ட முன் தயாரிப்பு பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன் இயக்குனர் ரத்னகுமாருடன் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படமும் வெளியானது. மேலும் சமீபத்தில் 'ஜில் ஜங் ஜக்' இயக்குனர் தீரஜ், இணை எழுத்தாளராக 'தளபதி 67' படத்தில் இணைந்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.
முன்னதாக தளபதி 67 படத்தில் திரிஷா இணையவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் ஏற்கனவே கிடைத்தன. அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை திரிஷா, விஜய்யுடன் இணைந்து கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தளபதி 67 படத்தில் இணைவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது நடிகர் சஞ்சய் தத் ‘தளபதி 67’ திரைப்படத்தில் வில்லனாக இணைந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. அவருக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன்மூலம் தளபதி விஜய் படத்தில் முதல் முறை சஞ்சய் தத் இணைந்துள்ளார். கேஜிஎஃப் திரைப்படத்தின் தமிழ் வெர்ஷன் மூலம் தமிழில் முகம் பதித்த சஞ்சய் தத், தளபதி 67 படத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் முதல் முறை நேரடியாக சஞ்சய் தத் கால் பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.