கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெரும்பாலானோரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேறு மாநிலங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.
பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்து செல்லும் அவர்களின் துயரங்கள் செய்திகளாக வெளியாகி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. சரியான உணவு இல்லாமல், பாதங்கள் வெடித்து, தங்கள் உடைமைகளை சுமந்து செல்லும் காட்சிகள் துயரங்களின் உச்சம்.
இதன் ஒரு பகுதியாக பீகார் மாநிலத்தில் ரயில்வே பிளாட்பாரத்தில் பெண் ஒருவர் இறந்துகிடந்தார். அவர் அருகில் அவருடைய குழந்தை அம்மா இறந்தது கூட தெரியாமல் அவரின் மேல் இருந்த போர்வையை இழுத்து, எழுப்ப முயற்சி செய்யும் வீடியோ, தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வெளியாகி, காண்போரின் கண்களில் கண்ணீரை வரவைத்தது.
இந்நிலையில் புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து பேசிய நடிகை குஷ்பு, ''ரயில்வே பிளாட்பாரத்தில் தனது தாய் இறந்தது கூட தெரியாமல் போர்வையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தானே அவனுக்காக பேசுங்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 48 மணி நேரத்தில் நம் ஊர் சென்று சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் ரயில் ஏறுகிறார்கள். ஆனால் 4 நாட்கள் ஆகியும் அந்த ரயில் எங்கு போகிறது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.
அவர்களிடம் கையில் போதிய பணமில்லை, உணவில்லை, தண்ணீர் இல்லை. மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கா பேசுங்கள். அரசியல் கட்சிகள் மட்டும் இந்தியா இல்லை. கொரோனா பாதிப்பினால் கஷ்டப்படுகிறார்களே மக்கள், அவர்களுக்காக பேசுங்கள். அவங்களுக்காக நிற்போம். இது தான் சரியான தருணம். Speakup India'' என்று தெரிவித்துள்ளார்.