நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள் மிகப்பெரியதாக உருவெடுத்தது. பல்வேறு பிரபலங்கள் தங்கள் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு அதில் மீண்ட கதைகளை மற்றவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பதிவு செய்துவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பிரபல நடிகர் மனோஜ் பாஜ்பாய் தனியார் இதழுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''நான் விவசாயியின் மகன். நான் பீகாரில் உள்ள ஒரு கிராமத்தில் 5 சகோதரிகளுடன் வாழ்ந்து வந்தேன். மிகவும் எளிய வாழ்க்கை. எப்பொழுதெல்லாம் சிட்டிக்கு வருகிறோமோ, அப்பொழுதெல்லாம் படம் பார்ப்போம். அமிதாப் பச்சனின் ரசிகன். அவர் மாதிரி ஆக வேண்டும் என்று நினைத்தேன். எனது 9 வயதில் நடிப்பு தான் எனது துறை என்று முடிவு செய்தேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நேஷனல் ஆக்டிங் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் சேர அனுமதி வழங்கி மூன்று முறை நிராகரிக்கப்பட்டார். இதுகுறுத்து அவர் தெரிவிக்கும் போது, ''நான் கிட்டத்தட்ட தற்கொலை செய்ய திட்டமிட்டேன். ஆனால் என் நண்பர்கள் என்னை தனியாகவிடவில்லை. எனக்கான வாய்ப்பு வரும் வரை கவனமாக பார்த்துக்கொண்டார்கள். அந்த வருடம் என்னை சேகர் கபூர் 'பண்டிட் குயின்' படத்துக்கு நடிக்க தேர்வு செய்தார்'' என்று குறிப்பிட்டுள்ளார். மனோஜ் பாஜ்பாய் தமிழில் சூர்யாவுக்கு வில்லனாக அஞ்சான் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.