சமீபகாலமாக கொரோனாவினால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனையடுத்து அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க மக்களின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம் என தமிழக முதல்வர் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். பிரபலங்களும் மக்களுக்கு அறிவுறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பிரபல நடிகர் வரதராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது நண்பர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்தததாகவும், இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். கொரோனா அறிகுறி என்பதால் மருத்துவமனைக்கு செல்ல, முயற்சித்தபோது எந்த மருத்துவமனையிலும் பெட் இல்லை எனவும், அழைத்துக்கொண்டு வராதீர்கள் எங்களால் சிகிச்சையளிக்க முடியாது எனவும் மருத்துமனை நிர்வாகங்கள் தெரிவித்ததாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
மேலும் மருத்துவமனைகளின் ஓனர், எம்டி என அனைவரிடம் பேசினாலும் யாரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை என்றும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ''அவருக்கு எப்படி கொரோனா வந்தது என்றே தெரிவில்லை, காரணம் அவர் மிகவும் ஒழுக்க வழிமுறைகளை கடைபிடிப்பவர். அதன் காரணமாக நமக்கெல்லாம் கொரோனா வராது என்று நம்பிக்கையில் வெளியில் சுற்றாதீர்கள். தேவைப்பட்டால் மட்டும் வெளியில் செல்லுங்கள். அப்பொழுதும் மாஸ்க் அணிவது உள்ளிட்ட அரசின் நடைமுறைகளை கடை பிடியுங்கள்'' என கேட்டுக்கொண்டார்.