அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்டமான இசையிலான இந்த படத்தில், அனைத்து பாடல்களும் ஏற்கனவே வெளியாகி உள்ளது. Adventure, Angst, Joy, Pain, Bloodlust, Celebration என்ற உள்ளடக்கத்தில் 6 பாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் பொன்னி நதி (Adventure) மற்றும் சோழா சோழா (Pain) பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இவை தவிர ராட்சஸ மாமனே (Joy), சொல் (Celebration) , தேவராளன் ஆட்டம் (Blood Lust) , அலை கடல் (Angst) ஆகிய பாடல்களும் வெளியாகி உள்ளன.
இதில் பொன்னியின் செல்வன் ட்ரெய்லரில் பின்னணியில் வரும் ரௌத்திர போர் ராப் பாடல் குறித்து பேசிவரும் ரசிகர்கள், “இந்த பாடலை தற்கால பாடலாசிரியர்கள் எழுதவில்லை. இந்த பாடலை எழுதியவர் பதஞ்சலி முனிவர். பதஞ்சலி முனிவர் இயற்றிய நடேச நவகம் பாடலான இந்த பாடலை தட்டி தூக்கிக் கொண்டு இந்த தலைமுறையிடம் சேர்த்திருக்கிறார்கள் இயக்குநர் மணிரத்னமும் ஏ.ஆர்.ரஹ்மானும்” என்று புகழ்ந்து வருகின்றனர்.