கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சோழப்பேரரசின் பொற்காலம் துவங்கும் காலக்கட்டத்தை ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து திரைக்குக் கொண்டு வரவிருக்கின்றனர்.
இதில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். மேலும் சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலா நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு, பிரபு, மற்றும் நடிகர் லால் ஆகியோரின் தோற்றங்கள் மற்றும் கேரக்டர் விபரங்கள் மோஷன் மோஸ்டராக வெளியாகியுள்ளன. அதன்படி பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கேரக்டர்களாகிய பெரிய வேளாளராக பிரபுவும், பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபுவும், மலையமானாக நடிகர் லாலும் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாக டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.