அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
Also Read | ஜெண்டில்மேனில் தொடங்கிய சகாப்தம்.. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம்.!
லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், ரஹ்மான், அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், "பொன்னி நதி" என பெயரிடப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிள், தற்போது வெளியாகி உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடலை அவரே பாடி உள்ளார். அவருடன் இணைந்து ஏ.ஆர்.ரிஹானா, பம்பா பாக்யா பாடியுள்ளானர். பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் இந்த பாடலை எழுதி உள்ளார்.
இந்த பாடல் வழக்கமான ஹிஸ்டாரிக்கல் பாடல்களை போல அல்லாமல், வழக்கு சொற்களில் இருப்பதாக பலரும் குறிப்பிட்டு வந்த நிலையில், இந்த பாடல் இவ்வாறு உருவாகி வந்ததன் பின்னணி குறித்து இந்த படத்தின் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனிடம் பிரத்தியேகமாக கேட்டறிந்தோம்.
அப்போது நம்மிடையே பேசிய அவர், “கதைப்படி வந்தியத்தேவன் பயணத்தில் தெம்மாங்கு பாடல்களை கேட்டுக்கொண்டே போகும்படியாகவே கல்கி எழுதி இருப்பார். இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் இசைக்கோர்வையும் அப்படி தெம்மாங்கு பாடலின் பண்புடனேயே இருக்கும். டியூனாக பார்த்தாலும் அது ஒரு நல்ல தெம்மாங்கு பாடல் தான்.
அந்த பாடலுக்கு சற்றே தூய அல்லது கடினமான சொற்களையும் மொழியையும் தேர்ந்தெடுத்தால், பொருந்தாமல் இருப்பதாக தோன்றும். அது வேண்டாம் என நாங்கள் கருதினோம். ரசிகர்கள் எதிர்பார்க்கிற மற்றும் பல ரசிகர்கள் விரும்புகிற கவித்துவமான மொழியில் எழுதப்பட்ட பல பாடல்கள் வேறு சூழ்நிலைகளுக்கு இப்படத்தில் இடம் பெறுகின்றன. ஆனால் இந்த பாடலின் இந்த சூழலுக்கு இப்படியான சொற்கள் தான் வேண்டும் என்கிற மனநிலையுடன் திட்டமிட்டே இப்பாடலை அனைவருக்கும் புரியும்படி எளிமையாக இப்பாடலை உருவாக்கினோம்.
அதே சமயம் இந்த பாடலின் தொடக்கத்தில் வரும் தொகையறாவில், பம்பா பாக்யா மற்றும், ஏ. ஆர்.ரெஹானா பாடிய பாடல்கள் சங்க இலக்கிய தொனியில் இருக்கும். மற்ற பாடல்களை முழுக்க முழுக்கவே அப்படி கவித்துவமாக இருக்கும். இந்த பாடலின் தேவைக்கும் தன்மைக்குமாக இப்பாடலில் இந்த மொழியை பயன்படுத்தி இருக்கிறோம்!” என்று தெரிவித்தார்.
Also Read | பெங்களூர் பழைய புத்தக கடையில்.. 1950-ல் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ முதல் பிரதிகள்.!