அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
இந்நிலையில், நந்தி மண்டபத்தில் குந்தவைக்கும் அருள்மொழிவர்மனுக்கும் இடையே நாவலில் இடம்பெற்றுள்ள ஒரு உரையாடல் வைரலாகி வருகிறது., அதன்படி நந்தினி பற்றி பேசும் குந்தவை, “நந்தினியின் உள்ளத்தை அவளைப் படைத்த பிரம்மதேவனாலும் கண்டறிய முடியாது. பழுவேட்டரையர் அவளிடம் படும் பாட்டை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது தம்பி. சற்றுமுன் அழகைப் பற்றி பேசினோம் அல்லவா? பெண்களில் அழகி என்றால் நந்தினிதான் அழகி. நாங்கள் எல்லோரும் அவள் கால் தூசி பெறமாட்டோம்” என்று அருள்மொழி வர்மனிடம் சொல்வாள்.
இதை குறிப்பிட்டு, இன்னும் படம் பார்க்காத சில ரசிகர்கள் படத்தில் இந்த dialogue இல்லாவிட்டால் நந்தினி ஆர்மி சார்பாக செல்லக்கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக கூறிவருகின்றனர். ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் சிறப்புகளுள் ஒன்றாக த்ரிஷா கூறும்போது, “நந்தினி - குந்தவையின் Face Off காட்சிகள்” முக்கியமானவையாக குறிப்பிட்டிருந்தார். இந்த செப்டம்பர் 30-ஆம் தேதி முதல், லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைபப்டம் பெருவாரியான ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.