தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். மக்கள் நாயகன் என தமிழ் சினிமா ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ராமராஜன் 1977 ஆம் ஆண்டு முதலே சிறிய வேடங்களில் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.
மண்ணுக்கேத்த பொண்ணு (1985) மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், 1986-ல் வெளியான ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ திரைப்படத்தில் கதாநாயகனாக தனது அறிமுகம் ஆனார். கிராமம் சார்ந்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். குறிப்பாக கரகாட்டகாரன் (1989) திரைப்படம் திரையரங்குகளில் 400 நாட்கள் ஓடி, தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றி அடைந்த படங்களில் மிகவும் முக்கியமான படமாகும்.
இந்நிலையில் நடிகர் ராமராஜன் நடிப்பிலான 45வது படமாக எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ளது‘சாமான்யன்’ எனும் படம். இப்படத்தின் டீசரும் தற்போது வெளியாகியுள்ளது. ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி இடம்பெறும் இந்த டீசரில், சாமானியர்களான ராமராஜன், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி ஆகியோர் சில காரணங்களுக்காக மனிதர்களை கடத்தி கொல்வதாக காட்டப்படுகிறது. இதில், ‘உங்க கேம் ஓவர் ஆகிடுச்சு’ என மைம் கோபி சொல்ல, அப்போது ராமராஜன், ‘எங்க கேமே இப்பதான் ஸ்டார்ட் ஆகுது’ என ஃபார்முலா ஸ்டைலில் பஞ்ச் வசனம் பேசுகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் இசை அறிமுக விழாவில் பேசிய பாடலாசிரியர் சினேகன், “ஒரு சில ஜாம்பவான்கள் கோலோச்சிக் கொண்டு இருந்த சமயத்தில் நான் சினிமாவில் நுழையாமல் போய்விட்டேனே என்றும் அவர்களுக்கு பாடல் எழுத முடியவில்லையே என்றும் வருத்தப்பட்டது உண்டு. அப்படிப்பட்டவர்களில் ராமராஜனும் ஒருவர். காரணம் அது ஒரு பொற்காலம்.
கிட்டத்தட்ட 3000 பாடல்களை எழுதி இருந்தாலும் ராமராஜனுக்கு எழுதவில்லையே என்கிற ஏக்கம் இருந்தது. சோளக்காட்டில், வயல்வெளியில், பயணங்களில் என அவரது படத்தின் பாடல்களை கேட்டு மகிழ்ந்த எனக்கு என்னுடைய ஆசை நிராசை ஆகிவிடாமல் இன்று அவர் நடிக்கும் படத்திற்கு பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது ஆசிர்வாதம் தான். தமிழ் சினிமாவில் ராமராஜன் என்பவருக்கான நாற்காலி இப்போதுவரை காலியாகவே இருக்கிறது. இதோ அவரே மீண்டும் அதில் வந்து அமர்ந்துகொண்டார்” என்று சிலாகித்து பேசினார்.
இப்படத்தில் சினேகனுடன் இணைந்து ராமராஜனுக்கு இன்னொருவரும் பாடல் எழுதியிருக்கிறார். அவர்தான் பொன்னியின் செல்வன் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார். லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலான இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன். இந்நிலையில்தான் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், தான் பிஸியாக இருக்கும் சூழ்நிலையிலும் கூட, ராமராஜனின் ரசிகர் என்பதால், இந்த படத்திற்காக ஒரு பாடலை எழுதிக் கொடுத்திருக்கிறார் என்று படக்குழுவினர் நெகிழ்ந்து கூறியுள்ளனர்.