அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் 1", நேற்று (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
பல ஆண்டு காலமாக, பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏராளமான திரை பிரபலங்கள் முயற்சிகளை மேற்கொண்டனர்.
சுமார், 50 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ் சினிமாவின் இந்த கனவு, இயக்குனர் மணிரத்னத்தால் தற்போது நிறைவேறவும் செய்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் வெளியானது முதல் உலகம் முழுக்க பிரம்மாண்டமான வரவேற்பும் வழங்கப்பட்டு வருகிறது.
பொன்னியின் செல்வன் 1 படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, லால், கிஷோர், சோபிதா, ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இதில், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும், நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார். கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "பொன்னியின் செல்வன் 1" திரைப்படம், உலகம் முழுவதும் முதல் நாளில் வசூல் செய்த தொகை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா பகிர்ந்துள்ளது.
அதன்படி, உலகம் முழுக்க முதல் நாளில் 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படம், 80 கோடி ரூபாயை வசூல் செய்ததாக குறிப்பிட்டுள்ளது. உலக அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் இது தான் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இனி வரும் விடுமுறை நாட்களிலும் பொன்னியின் செல்வன் 1 திரைப்படம், சிறந்த வரவேற்பை பெறும் என்ற நிலையில், வசூல் ரீதியாக இன்னும் நிறைய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.