நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி இசையமைப்பாளராக இருந்து பிரபல நடிகராக மாறியவர். 2016ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. மேலும் ஒடியா, மராத்தி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை முதலில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இயக்குவதாக இருந்தது.
பின்னர் சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் பணிபுரிய முடியாமல் போய்விட்டது. இப்போது அவருக்கு பதிலாக இந்த திரைப்படத்தை இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியே இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் டிவிட் செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.
Welcome to the Director’s Clan ‘Director’ @vijayantony 👏🏽 Wishing you the very best for #Pichaikkaran2 & #Bichagadu2 😊 Blockbuster 2022 ahead for you! @vijayantonyfilm @mrsvijayantony pic.twitter.com/2AHyYOjceE
— A.R.Murugadoss (@ARMurugadoss) July 24, 2021
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிச்சைக்காரன்-2 திரைப்படம் தெலுங்கில் பிச்சஃகாடு-2 என்று பெயரிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு இந்த திரைப்படம் திரைக்கு வரும் என போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனியின் பிறந்த நாளான இன்று இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதை இயக்குநர், நடிகர் விஜய் ஆண்டனி இது குறித்து பகிர்ந்து கொண்டதாவது...
ஒரு நீண்டகால கனவு இறுதியாக நனவாகிறது. இந்த புதிய அவதாரம் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. நீண்ட காலமாக எனது மனதில் இயக்குநர் ஆகும் ஆசை இருந்தது. ஒரு நடிகராக ஒவ்வொரு திரைப்படத்திலும், நான் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன், பல்வேறு திரைப்பட இயக்குநர்களிடமிருந்து பல நுட்பங்களையும், திறன்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எந்தவொரு படைப்பாளிக்கும், தான் பணிபுரியும் துறை பற்றிய விழிப்புணர்வு இருப்பது நன்மை தரும் அம்சமாகும். இசையமைப்பாளராகவும் ஒரு நடிகராகவும் இத்துறையில் சிறந்ததொரு வெற்றியைப் பெற்றிருப்பது எனது அதிர்ஷ்டம். எனது திறமைகளை வளர்த்துக் கொள்ளும், இந்த திரைப்பயணத்தில், என்னை ஆதரித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு நான் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். எனது பிறந்தநாளின் இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், "பிச்சைக்கரன் 2" திரைப்படத்தில், இயக்குநராக எனது புதிய பயணம் துவங்குவதை, உங்களுக்கு தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மிகப்பெரும் பட்ஜெட்டில் ஒரு பிரமாண்டமான படைப்பாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் நாயகி பாத்திரத்தில் நடிக்க, முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ரசிகர்களுக்கு செண்டிமென்டும், பொழுதுபோக்கும், சரி விகிதத்தில் கலந்த சிறப்பானதொரு அனுபவத்தை "பிச்சைக்கரன் 2" திரைப்படம் தரும். இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.