ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் முன்னதாக ஜிபி முத்து மரியாதை குறைவாக பேசியதாகவும், தன் மீது கோவப்பட்டு ஒருமையில் பேசுவதாகவும் தனலட்சுமி குற்றம் சாட்ட் இருந்தார். அப்போது அனைவர் முன்னிலையிலும் தனலட்சுமியிடம் பேசிய ஜனனி, "ஜிபி முத்து எகிறிக் கொண்டு வந்ததாக நீ கூறுகிறாய். ஆனால், நீ திருப்பி பேசிய விதம் தவறு. வயதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என நான் உன்னிடம் கூறிய போது, நீ பிக்பாஸ் வீட்டிற்கு வந்தேன் என குறிப்பிட்டாய். ஆனால், பிக்பாஸ் வீடு என்றால் அம்மா, அப்பா, அக்கா என இது ஒரு வீடு மாதிரி. இங்கே நீ அனைவரையும் வயதுக்கு ஏற்ற மாதிரி பார்க்க வேண்டும்.
அனைவரையும் ஒரே நிலையில் எடுத்துக் கொள்ள இது ஒன்றும் ரீல்ஸ் கிடையாது. அவருடைய வயதுக்கு அவர் எகிறினார் என்றால் அவர் எங்களுக்கு அப்பா மாதிரி தான். அவரே ஒரு இடத்தில் கோபப்பட்டால் கூட, நீ பொறுமையாக போயிருக்க வேண்டும். உன்னை விட வயது குறைவான நான் தலைவராக இருந்து ஒரு வேலையை உன்னிடம் சொல்லும் போது எதிர்த்து பேசவும் வாய்ப்புண்டு. நீ நடந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை" என கூறினார். உடனே அங்கிருந்து எழுந்து சென்ற தனலட்சுமி, "பிக்பாஸ் வீட்டில் வராமலே இருந்திருப்பேன்" என குறிப்பிட்டு அழவும் ஆரம்பித்து விட்டார்.
இதனிடையே இந்த வார இறுதியும் வந்து விட்டது. நடிகர் கமல்ஹாசன் வழக்கம் போல் நடந்த பிரச்சனைகள், பஞ்சாயத்துகளை சபையில் பேசக்கூடிய ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி விட்டன. இந்நிலையில் இந்த வாரம் பல முக்கிய பஞ்சாயத்துக்களை விசாரிக்க வேண்டி இருப்பதாக கமல் ப்ரோமோவில் குறிப்பிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக தனலட்சுமியை விசாரிக்கும் நடிகர் கமல்ஹாசன், தனலட்சுமி தனியே சென்று வெளியே போய் அழுதது குறித்து கேட்கிறார்.
அதற்கு தனலட்சுமியோ, “நான் என்ன பேச வேண்டும் என்று நினைத்து உள்ளே வந்தேனோ.. அது எதையுமே பேச முடியவில்லை” என்று கூற, அதற்கு கமல்ஹாசன், “வெளியேவும் அப்படித்தானே இருந்தது. ? நீங்கள் நினைத்ததை யார் தான் பேச விட்டார்கள்? ஆனால் நீங்களாக போனை எடுத்து சமூக வலைதளத்தில் பேசவில்லையா? அப்படித்தான் இதுவும்... அதுதான் இங்கே இருக்கும் சவால்.. நீங்கள் வெளியே சென்று தனியே அழுதீர்கள் என்றால் அப்படியே வெளியே அனுப்பி விட போகிறார்கள்!” என்று கேட்கிறார். இந்த புரோமோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.