மறைந்த மலையாள இயக்குனர் சச்சி இயக்கத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் தற்போது தெலுங்கில் 'பீம்லா நாயக்' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் முன்னணி நடிகர்கள் நடிப்பதாக பேச்சு அடிபட்டது ஆனால் இதுகுறித்த உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
பிரித்விராஜ் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும், பிஜு மேனன் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும் இருவரும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இருவேறு ஆதிக்க துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்குள் ஏற்படும் மோதல் பின் ஈகோவாக மாறி அது எத்தகைய பாதிப்புகளை உண்டாக்குகிறது என்பது பற்றியே இந்த திரைப்படம் அமைந்தது.
தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி இருவரும் நடித்துள்ளனர். நடிகை நித்யா மேனன் இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சூர்யா தேவர நாகவம்சி இப்படத்தை இயக்கியுள்ளார். சாகர் சந்திரா தயாரித்துள்ளார். பிஜு மேனன் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா டகுபதியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார்.
பீம்லா நாயக் படத்தின் நான்கு பாடல்களும் பட்டையை கிளப்பின. அதிலும் 'அடவி தல்லி மாட' பாடல் பட்டி தொட்டியங்கும் அதிரவைத்தது. ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். மலையாளத்தை விட தெலுங்கில் பீம்லா நாயக் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் ஜனவரி 12-ம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஜனவரி மாதம் ஆர்ஆர்ஆர் மற்றும் ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் வெளியாக இருந்ததால் பாக்ஸ் ஆபிஸ் மோதல் மற்றும் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர்.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சமூகவலைதள பக்கத்தில், நாங்கள் எப்போதும் உறுதியளித்தபடி, #BheemlaNayak ஒரு பெரிய திரையரங்க அனுபவமாக இருக்கும். எனவே, உங்கள் அனைவருக்கும் திரையரங்குகளில் திரையிடுவதற்காக தொற்றுநோய் குறையும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். நிலைமை சீரான பிறகு பிப்ரவரி 25 அல்லது ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். பிப்ரவரி 25ம் தேதி சர்வானந்த் ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள அடவால்லு மீக்கு ஜொஹர்லூ திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.