தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வருபவர் ரா. பார்த்திபன்.
ஒத்த செருப்பு திரைப்படத்தில் தனியாக நடித்து இயக்கி இந்திய அளவில் கவனம் ஈர்த்திருந்த பார்த்திபன் இயக்கத்தில் 'இரவின் நிழல்' படம் கடந்த சில மாதங்களுக்கு முன் திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது. நான் லீனியர் திரைக்கதையில் ஒரே ஷாட்டில் உருவான இந்தப் படத்தில் பார்த்திபன் 'நந்து' எனும் சினிமா பைனான்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தினை பார்த்திபனின் அகிரா பிலிம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரித்தது. இப்படத்தில் பார்த்திபன் நாயகனாக நடிக்க, ரோபோ ஷங்கர், வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ரூத், பிரிஜிடா சகா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்தனர்.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்தார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்தார். கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியானது. இரவின் நிழல் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி உள்ளது. இரவின் நிழல் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் இரவின் நிழல் படத்தின் மேக்கிங் வீடியோவும் யூடியூப் தளத்தில் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக பார்த்திபன் தனக்கே உரித்தான பாணியில் சில பதிவுகளைக் கூட வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், பாலிவுட் நடிகர் அமீர்கான், இரவின் நிழல் மேக்கிங் பார்த்து விட்டு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட்களை தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் பார்த்திபன்.
இது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட்களை பகிர்ந்த பார்த்திபன், "6.4 rector அளவில் பதிவு ஆகியுள்ளது-mandous புயலின் அளவல்ல! Making of இரவின் நிழலின் views! ஒவ்வொரு view-வுக்கும் தனித்தனி நன்றியும் மகிழ்ச்சியும். ஒரே ஒரு கைதட்டலைக்கூட மதிப்பவன் நான். ஏன் ஒரு கை ஓசையை கூட! ஒ!!! ஒரு கை ஓசை எழுப்புமா? எழுப்பாதென்பது சான்றோர் கருத்து (என் குரு உட்பட) எழுப்பும். ஒரு கையை வெறுங்கையாய் பார்க்காமல், அதில் ஐவிரல் உள்ளதை view செய்தோமானால்… அதில் இரு விரல் கொண்டு ‘சொடுக்கு’ போட்டு ஓசை எழப்பலாம். So, ஒரு விரல் ஓசை எழுப்பாது என்று வேண்டுமானால் புதுமொழி எழுதலாம்.
பார்வை தான் முக்கியம்> views! தொடரும் நல்ல பார்வைகளுக்கும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. செய்தியறிந்து முதலில் வாழ்த்தியவர் இந்திய நடிகர் அமீர்கான் (பணியாற்றியதில்லை-இதுவரை)அபிஷேக் பச்சன்>விமர்சையாக நம்மூர் நல்லவர்களும் வாழ்த்தினர்.Rahman சாரின் இசை’வே அற்புதம்" என குறிப்பிட்டுள்ளார்.
இரவின் நிழல் மேக்கிங் பார்த்து விட்டு அமீர்கான் நிச்சயம் படத்தையும் விரைவில் பார்ப்பேன் என பார்த்திபனை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளது தொடர்பான செய்தி, தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. ஒத்த செருப்பு திரைப்படத்தை பாலிவுட்டில் நடிகர் அபிஷேக் பச்சனை வைத்து பார்த்திபன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது .