விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அண்ணன் தம்பிகள் அனைவரும் தனித்தனியே மொய் வைக்க, கம்ப்யூட்டர் மொய் டேட்டேபேஸில் ஜீவா - மீனாவின் பெயர் மட்டும் இல்லாமல் போகிறது.
இது மீனாவின் தந்தை மூலமாக மீனா & ஜீவாவுக்கு தெரியவர, ஜீவா தன் மூத்த அண்ணன் மூர்த்தி உள்ளிட்ட சகோதரர்களிடம் ஆவேசமாக வந்து, “எங்களை அவமானப்படுத்திவிட்டீர்களே.. எனக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்களே!” என அழுது கத்துகிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பெருத்த குழப்பம் ஏற்படுகிறது.
ஆனால் இந்த குழப்பத்துக்கெல்லாம் காரணம் கண்ணன் செய்த வேலைதான். ஆம், அவரிடம் மொய்க்கவரை கொடுத்த அவரது அண்ணன் மூர்த்தி 50 ஆயிரம் பணத்தை கொடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரில் மொய் போடச் சொல்லி அழுத்தம் திருத்தமாக சொல்லி அனுப்பினார். ஆனால் கண்ணனோ, மொய் வைக்கும்போது கதிர் - முல்லை சார்பிலான மொய் பணத்தை முல்லையின் தாயாரிடம் இருந்து பெற்றுக்கொண்டு செல்கிறார். இப்படி மொத்தம் 3 மொய் கவரை கண்ணன் கையில் வைத்துள்ளார். ஒன்று தங்களுடைய சார்பில், இன்னொன்று கதிர் - முல்லை சார்பில் தனியே இருந்த மொய்ப்பணம், 3வது பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரிலான மொய் பணம். அதில்தான் ஜீவா & மீனாவுக்கான மொய்ப்பணம் உள்ளது.
ஆனால் கண்ணனோ பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரில் போடச்சொல்லி தன் அண்ணன் சத்தியமூர்த்தி கொடுத்த மொய்ப்பணத்தை, பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரில் போடாமல் சத்தியமூர்த்தி - தனலட்சுமி பெயரில் போட்டுவிட்டார். இதனால் ஜீவா - மீனா தம்பதி பெயர் மட்டும் மொய் லிஸ்டில் இடம்பெறாமல் போகிறது. நடப்பது மீனாவின் தங்கை திருமணம் என்பதால், மீனாவின் தந்தை இதை மீனாவிடம் கேட்டுவிட்டதாலும் மீனாவுக்கு அவமானமாகிறது. இதை அவர் ஜீவாவிடம் கேட்க, ஜீவாவோ ஏமாற்றத்தால் கோபமும் அழுகையுமாக அண்ணன் மூர்த்தியிடம் சென்று, இதுநாள் வரை தன் மனதில் இருந்த அத்தனையையும் கொட்டி தீர்த்து விடுகிறார்.
அதன்படி, “எங்களை மட்டும் இந்த குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டீர்களே .. ஒரு கல்யாண வேலைக்கு கூட உங்களிடம் சொல்லிவிட்டு அனுமதி எதிர்பார்த்து காத்திருக்க வேண்டி இருக்கும். ஏன் கல்யாணமென்றால் 1008 வேலை இருக்கும் என தெரியாதா? என் மாமனாருக்கு உடம்புக்கு முடியவில்லை, நான்தான் போய் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தோன்றவில்லையா? நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? நீங்களாக வந்து எனக்கு கடை வேலையில் உதவ வேண்டாமா? கதிர் கார் வாங்கியதை சொல்லவில்லை என்னும்போது நான் மட்டும் ஏன் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? நான் அப்படித்தான் எல்லாவற்றையும் சொல்லி அனுமதி பெற்று இருந்தேன், அதற்கு இப்படி ஒரு பதிலடி கொடுத்து விட்டீர்களே? என் பெயரே மொய் லிஸ்டில் இல்லை. ஏனென்றால் நான் சம்பாதிக்கவில்லை. அனைவரும் தனித்தனியாக சம்பாதிக்கிறார்கள் என்பதால் மொய் வைத்திருக்கிறார்கள்.
கதிர் தனியாக சம்பாதிப்பதால் கார் வாங்கி இருக்கிறான், நான் சம்பாதிப்பது இல்லை என்பதால் கார் வாங்கவில்லை. உங்கள் தம்பிகள் என்ன வேலை செய்கிறார்கள் என்பதை நீங்கள் திருமணத்துக்கு வந்தவர்களிடம் சொல்லும் பொழுது நான் உங்களுடன் கடையில் இருப்பதாக கூறினீர்கள், அது எவ்வளவு எனக்கு எவ்வளவு அவமானமாக இருந்தது தெரியுமா? கதிர் வாங்கிய கார் அவனுடையதுதான், அதை நான் உரிமையாக எடுத்துச் செல்ல முடியாது, நான் ஓட்டிக்கொண்டிருந்த பைக்கை வேலைக்கு செல்கிறானே என்று சொல்லி வங்கியில் வேலை பார்க்கும் தம்பி கண்ணனுக்கு கொடுத்தேன். நான் ஒரு ஓட்டை வண்டியை எடுத்துக் கொண்டேன். ஆனால் அந்த கண்ணன் இப்போதுதான் சம்பாதிக்க ஆரம்பித்து முதல் மாத சம்பளம் பெற்று இருக்கிறான், அவன் நான் இந்த வீட்டுக்கு எதுவுமே செய்யவில்லை என்று என்னை குத்தி காட்டி சொல்கிறான். காரணம் நான் சம்பாதிக்கவில்லை என்பதுதான்” என்று அழுதபடி பேசுகிறார்.
அப்போது மூர்த்தியும் தனமும் அவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், “ஏண்டா இப்படி எல்லாம் பேசுற? இங்க நின்று பேச வேண்டாம்.. வா வீட்டுக்கு போகலாம்” என்று அழைக்கின்றனர். அதற்கு ஜீவாவோ, “நான் வரமாட்டேன், அந்த வீடு உங்கள் வீடு. உங்கள் வீட்டுக்கு நான் வரமாட்டேன். உங்கள் தம்பிகளை அழைத்துக் கொண்டு கிளம்புங்கள்” என்று ஆவேசமாக கூறுகிறார். மூர்த்தியின் முகம் வெளரி கண் கலங்குகிறது. இந்த சண்டையை கொஞ்சம் எரியும் நெருப்பில் நெய் ஊற்றி தூண்டி விட்டது ஜீவாவின் மாமனாரும் கூட, இருப்பினும் அவர் தாமாக எதுவும் செய்யவில்லை என்றாலும் வந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார். தொடர்ந்து இந்த சண்டை எங்கே சென்று முடிய போகிறது என்பது அடுத்தடுத்து எபிசோடுகளில்தான் தெரியவரும்.