ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி குடியரசு தின விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு, 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்ம விருதுகள்
ஆம், பத்ம பூஷன், பத்ம விபூஷண், மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் தொடர்பான அறிவிப்புகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. மத்திய அரசின் இந்த பத்ம விருதுகள் பட்டியலில் கலை, இலக்கிய, சமூகம், அரசியல், தொழில் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக பலருக்கும் விருதுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழக கலைஞர்கள்
தமிழகத்தில் இருந்து பழங்கால நடன வடிவமான சதிர் நடனக்கலையை பாராட்டி, திருச்சி ஆர்.ஆர் முத்துகண்ணமாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி கர்நாடக நாதஸ்வர கலைஞர் ஏ.கே.சி நடராஜனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியம், திரைக்கலை
இதேபோல் பிரபல தமிழ் இலக்கியவாதி, கவிஞர் என பன்முகம் கொண்ட சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு இலக்கியத்தின் கீழ் பத்மஸ்ரீ விருதும், தென்னிந்தியத் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகையும் பழம்பெரும் நடிகையுமான சௌகார் ஜானகிக்கு கலை சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நடிகை சௌகார் ஜானகி அண்மை காலங்களிலும் திரைப்படங்களில் தளராமல் நடித்துவருகிறார். அண்மையில் நடிகர் சந்தானம் நடித்து வெளியான பிஸ்கோத்து திரைப்படத்தில் கதை சொல்லும் பாட்டியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சௌகார் ஜானகி நடித்திருப்பார். அவரை மையமாக வைத்துதான் அந்த திரைப்படத்தின் கதை சுழலும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் சௌகார் ஜானகி அந்த திரைப்படத்தில் தோன்றி இருப்பார்.
மருத்துவம், வர்த்தகம்
இவர்களுடன் இந்திய அளவில் பெருமைப்படுத்தும் விதமாக சென்னை சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் வீராச்சாமி சேஷய்யாவுக்கும் பத்மஸ்ரீ விருதும், தமிழகத்தில் பிறந்து டாடா குழுமத்தின் சிஇஓவாக உள்ள நடராஜன் சந்திரசேகரனுக்கு வர்த்தகத்தில் சிறந்து விளங்குவதற்காக பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுந்தர் பிச்சை
குறிப்பாக, உலக அரங்கில் தமிழர்களையும் இந்தியர்களையும் தலைநிமிரவைத்தவரும், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பிறந்து உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் சிஇஓவாக பணிபுரிபுவருமான சுந்தர் பிச்சைக்குபத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.