பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”.
இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
மேலும், இப்படத்தின் ப்ரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், "சேத்துமான் கதையை படித்த போது, இது ஒரு ஃப்யூச்சர் ப்லிம்மாக இருக்குமா? என்கிற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனாலும் இந்தக் கதை என்னை வெகுவாக பாதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
சுயாதீனத் திரைப்படங்கள்
கட்டுப்படுத்த முடியாத யாராலும் தணிக்கை செய்ய முடியாத எண்ணங்களை திரைப்படங்களாக மாற்றுவது மிகவும் முக்கியம் என்று நான் கருதுகிறேன். இலக்கியத்திற்கு இருக்கின்ற கட்டற்ற சுதந்திரம் சினிமாக்களுக்கும் இருக்க வேண்டும் என்பது பிற உலக மொழித் திரைப்படங்களைப் பார்த்து நான் தெரிந்து கொண்ட ஒன்று. சுயாதீனத் திரைப்படங்களை இப்பொழுது என்னால் எடுக்க முடியாவிட்டாலும் கூட இனி வரும் காலங்களில் அது போன்ற திரைப்படங்களை எடுக்க வேண்டும் எனும் ஆர்வம் இருக்கிறது.
சரி இப்பொழுது சுயாதீனத் திரைப்படங்களை தயாரிப்போம் என்கின்ற எண்ணத்தில் இருந்தேன். அப்பொழுது தான் இயக்குநர் தமிழ் என்னை அணுகி இந்தக் கதையை கொடுத்தார். அதைப் படித்ததுமே எனக்கு அக்கதை மீது மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. நான் எழுத்தாளர் பெருமாள் முருகனின் தீவிர விசிறி. யாரும் எனக்கு அவர் எழுத்தை அறிமுகப்படுத்தவில்லை. நானாக தேடி கண்டடைந்த எழுத்தாளர் அவர்.
சேத்துமான் திரைப்படம் ஒரு பரிட்ச்சார்த்த முயற்சி தான். இத்திரைப்படத்தை போட்ட பணம் திரும்ப வருமா? என்கின்ற வணிக ரீதியில் அணுகாமல், பணம் திரும்ப வராவிட்டாலும் பரவாயில்லை. இந்தக் கதையை நாம் சொல்ல வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தான் இதை முன்னெடுத்துச் சென்றோம்.
முழு சுதந்திரம்
நீலம் தயாரிப்பில் படம் செய்யும் இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் முழு சுதந்திரம் கொடுத்து வருகிறோம். கதை ஒரு முறை முடிவாகிவிட்டது என்றால், பின்னர் அதில் எந்தவித குறுக்கீடுகளும், நடிகர்கள் தொடர்பான சிபாரிசுகளும் இருக்காது. நீலம் தயாரிப்பில் வந்த படங்களிலேயே இந்தத் திரைப்படம் இயக்குநரின் முழு சுதந்திரத்தோடு வெளியான படம் என்று சொல்லலாம். அவர் என்ன நினைத்தாரோ, அப்படியே படத்தை எடுத்து முடிக்க நாங்கள் உறுதுணையாக இருந்திருக்கிறோம்.
சிறிய முதலீட்டில் எடுத்து இப்படம் நல்ல லாபத்தை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. இது படக்குழுவினர் உட்பட எங்கள் அனைவருக்குமே உற்சாகத்தை கொடுக்கிறது. இப்பொழுது கூட கான் திரைப்பட விழாவிற்கு சென்று வந்தேன். அங்கு வருகின்ற படங்கள் எதுவுமே பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அல்ல. தான் சொல்ல வரும் கருத்தில் எந்த சமரசமும் இல்லாமல் உறுதித்தன்மையோடு குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் பெரும்பாலும் அங்கு தேர்வாகின்றன. இது போன்ற கருத்தியல் அம்சம் கொண்ட சுயாதீனத் திரைப்படங்களை எடுக்க விரும்பும் இயக்குநர்கள் நீலம் புரொடெக்சனை அணுகலாம்" என இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.