தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். தமிழ் சினிமாவின் திசைவழிப்போக்கை மாற்றிய இயக்குனர்களின் பெயர்களை பட்டியலிட்டால் இவரின் பெயரை எவராலும் தவிர்க்க முடியாது.
இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “மெட்ராஸ்” திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.
“மெட்ராஸ்” படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார். இதில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தது.
இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.
அதன் பின்னர் நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கிய “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. 70 களில் சென்னையின் ஒரு அங்கமாக இருந்த குத்துச்சண்டை போட்டிகளை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. “நட்சத்திரம் நகர்கிறது” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஒரு காதல் திரைப்படமாக எடுக்க பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை ஆடை பட இயக்குனர் ரத்தின குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புதுமுகங்களை வைத்து நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இந்த படத்தை எடுக்க இருக்கிறார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
For many years i was waiting for this. A Love story from him. Infact i asked him in the last meeting.
Thank you @beemji na 😍❤️❤️❤️
— Rathna kumar (@MrRathna) July 18, 2021