தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் பா. ரஞ்சித். 'அட்டகத்தி' மூலம் இயக்குனராக அறிமுகமான பா. ரஞ்சித், அடுத்த படத்தில் கார்த்தியை வைத்து 'மெட்ராஸ்' என்ற படத்தையும் இயக்கி இருந்தார்.
இதற்கு அடுத்தபடியாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா ஆகிய திரைப்படங்களையும் அடுத்தடுத்து இயக்கி இருந்தார் பா. ரஞ்சித்.
இதனைத் தொடர்ந்து, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருந்த பா. ரஞ்சித், தற்போது விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்து வரும் 'தங்கலான்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். பழைய காலகட்டத்தில் நடக்கும் கதை தான் தங்கலான் என இந்த படத்தின் அறிமுக வீடியோ மூலம் தெரிய வருகிறது.
திரைப்படங்களை ஒரு பக்கம் இயக்கி வந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்தும் வருகிறார் பா. ரஞ்சித். அந்த வகையில், அவரது தயாரிப்பில் உருவாகி இருந்த பொம்மை நாயகி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் இயக்குனர் பா. ரஞ்சித், நடிகர் கமல்ஹாசனை சந்தித்துள்ளார். நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தினைத் திறந்து வைக்க வருகை தரும்படி கமல்ஹாசனை அழைத்தார். அதன்படி, நாளை (12.02.2023) காலை 11:30 மணிக்கு சென்னை எக்மோரில் உள்ள நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தை திரு. கமல்ஹாசன் அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners
தங்கலான் படத்தை தொடர்ந்து, கமல்ஹாசனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக சில பேட்டிகளில் இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.