மலையாளத்தில் 1993ம் ஆண்டு வெளியான 'மணிசித்ரதாலு' படத்தை இயக்குனர் ஃபாசில் இயக்கியிருந்தார்.
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், சுரேஷ் கோபி, நெடுமுடி வேணு, நடிகை ஷோபானா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குநர் பி.வாசு கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் 2004ல் ரீமேக் செய்தார். கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 2005ம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்திரமுகி திரைப்படம் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் 890 நாட்கள் ஓடி இந்தப்படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் தமிழ் சினிமாவில் முதல்முறையாக 50 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படமாக சந்திரமுகி உருவானது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினியுடன், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர் உள்ளிட்டோர் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்து இருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு, நடிகர் ராகவா லாரன்ஸ், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக அறிவித்தார். இந்நிலையில் நடிகை அனுஷ்கா இந்த படத்தின் முக்கிய வேடத்தில் குறிப்பாக டைட்டில் ரோலான சந்திரமுகி பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தின் அறிவிப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து, ரசிகர்கள் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இந்தப் படத்தில் மீண்டும் நடிப்பார்களா என்பதை அறிய மிகவும் ஆர்வமாக இருந்தனர். இருப்பினும், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.