நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பொன்மகள் வந்தாள்'. இதனை அவரது கணவர் சூர்யா தனது 2D Productions சார்பாக தயாரித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் படம் OTT ஆன்லைன் தளங்கள் மூலம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தியேட்டர் உரிமையாளர்கள் இதனை எதிர்த்து கடுமையா எதிர்த்தனர். மேலும் இனி எந்த சூர்யா ஜோதிகா தயாரிப்பு படங்களும் திரையரங்குகளில் வெளியாகாது என்றும் கூறினார். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து 30 தயாரிப்பாளர்கள் ஒன்றாக சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். "திரைப்பட தயாரிப்பு அதிகம் ரிஸ்க் உள்ள ஒரு துறை. அதில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். அவர்களில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அவர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்தாலும் அப்படத்தை வெளியிட யாரும் முன் வருவதில்லை. அப்படியே வெளியிட்டாலும் அப்படங்களுக்கு திரையரங்கு மற்றும் ஷோ கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இத்தகைய பிரச்சனைகள் பெரிய நடிகர்கள்-இயக்குனர்கள் படங்களுக்கு அதிகம் இல்லை.
மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும் வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்துவரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்து கொள்கிறோம். தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறோம்.
இந்த கொரோனா லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்தாலோசித்து, விவாதித்து, இதற்கான (OTT படங்கள்) வரைமுறைகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாக செயல்பட, சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டு கொள்கிறோம். இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.