உலகளவில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது ஆஸ்கர் விருது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 93வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
வழக்கமாக டால்பி திரையரங்கில் நடைபெறும் இந்த ஆஸ்கர் விருது விழா இந்த முறை கொரோனா காரணமாக யூனியன் ஸ்டேஷன் நகரில் போதிய சமூக இடைவெளிகளை கடைபிடித்தபடி நடந்தது.
இந்த விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆவணப்படம், சிறந்த குறும்படம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டன.
குறிப்பாக பிரபல திரைப்படமான நோமட்லேண்ட் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநருக்கான விருது என 3 ஆஸ்கர் விருதுகளை குவித்தது. இதே போல், சிறந்த நடிகருக்கான விருதை ‘தி ஃபாதர்’ திரைப்படத்திற்காக ஆன்டனி ஹாப்கின்ஸ் பெற்றார்.
இதனிடையே 93வது ஆஸ்கர் விருது விழாவின் நினைவேந்தல் பிரிவில், உலகின் பல்வேறு மறைந்த தலைசிறந்த கலைஞர்களுக்கான இறுதி மரியாதையை செலுத்தி வீடியோ ஒன்று இடம் பெற்றது. இந்த வீடியோவில் மறைந்த இந்திய நடிகர் இர்ஃபான் கானுக்கும், பானு அதையாவுக்கும் மரியாதை செலுத்தப்பட்டு அவர்களது புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.
இதில் பானு அதையா தான் ஆஸ்கர் விருதினை பெற்ற முதல் இந்திய பெண்மணி. அதுவும் காந்தி திரைப்படத்தின் காஸ்டியூம் டிசைனிற்காக அவர் இந்த விருதினை பெற்றார். இதேபோல், இர்ஃபான் கான் Slumdog Millionaire, Life of Pi உள்ளிட்ட ஆஸ்கர் விருதுகளை பெற்ற படங்களின் மூலம் உலக அளவில் கவனம் பெற்றவர். இவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார்.