கடந்த மார்ச் 28 ஆம் தேதி நடைபெற்ற 94 வது ஆஸ்கார் விருது விழாவில், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது மனைவி பற்றி கேலியாக பேசிய நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை கண்ணத்தில் அறைந்தார். இது உலகம் முழுவதும் சமூக வலை தளங்களில் விவாதப் பொருளாக மாறியது.
ஆஸ்கார் விருது தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ராக், சிறந்த நடிகருக்கான விருது வென்ற வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித்தின் தலைமுடி குறித்து நகைச்சுவை என்ற பெயரில் கேலி செய்தார். இதனால் கோபமடைந்த ஸ்மித் மேடைக்கு சென்று ராக்கை பளார் என்று அறைந்துவிட்டு கீழே இறங்கி சென்றார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு ஆஸ்கர் விருதை பெற்று மேடையில் பேசிய நடிகர் வில் ஸ்மித் ‘காதல் உங்களை இதுபோல பைத்தியக் காரத்தனமான செயல்களை செய்யவைக்கும்’ எனக் கூறியிருந்தார்.
பின்னர் வில் ஸ்மித் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் "வன்முறை என்பது எந்த வடிவில் இருந்தாலும் விஷமானது மற்றும் அழிவுகரமானது. நேற்றிரவு நடந்த அகாடமி விருதுகளில் எனது செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மன்னிக்க முடியாதது. நகைச்சுவைகள் வேலையின் ஒரு பகுதியாகும், ஆனால் ஜடாவின் உடல்நிலை குறித்த நகைச்சுவை என்னால் தாங்க முடியாத அளவுக்கு இருந்தது. அதற்கு நான் உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்தேன்.
கிறிஸ் ,நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் எல்லையைத் தாண்டிவிட்டேன். நான் செய்த தவறுக்காக வெட்கப்படுகிறேன். அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை. அகாடமி, நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் இதைப் பார்த்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
வில்லியம்ஸ் குடும்பத்தினரிடமும் எனது கிங் ரிச்சர்ட்(இந்த படத்துக்காகதான் ஆஸ்கர் விருதை வென்றார் வில்) குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நம் அனைவருக்கும் ஒரு அழகான நிகழ்வாக இருந்ததை எனது நடத்தை கறைபடுத்தியதற்கு நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.’ எனக் கூறி இருந்தார்.
மேலும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (Academy of Motion Picture Arts and Science) அமைப்பின் உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார் வில் ஸ்மித். இந்நிலையில் ஆஸ்கார் விருது கமிட்டி வில் ஸ்மித்தை 10 வருடங்கள் ஆஸ்கார் விருது விழாவில் பங்கேற்ப்பதில் இருந்து தடை விதித்துள்ளது. ஸ்மித்தின் மீதான நடவடிக்கைகளுக்கள் குறித்து விவாதிக்க அகாடமியின் ஆளுநர்கள் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"94வது ஆஸ்கார் விருதுகள், கடந்த ஆண்டு நம் சமூகத்தில் நம்பமுடியாத பணிகளைச் செய்த பல நபர்களின் கொண்டாட்டமாக இருந்தது. இருப்பினும், திரு. ஸ்மித் மேடையில் வெளிப்படுத்தியதை நாங்கள் பார்த்த ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தீங்கு விளைவிக்கும் நடத்தையால் அந்த தருணங்கள் மறைக்கப்பட்டன," என்று அகாடமி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.