அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது. இதில்‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் விருது வென்றுள்ளது.
RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது.
இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார். ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு. RRR படம் உலகம் முழுவதும் 1100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாக ஈட்டியது. ஒடிடியில் இந்த படம் வெளியான பிறகும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி இந்த படம் ஜப்பான் திரையரங்குகளில் ஜாப்பனிஷ் மொழியில் வெளியாகி உள்ளது. ஐமாக்ஸ் 3டியிலும் இந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 95வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த பாடலுக்கான விருதை ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் & இந்த பாடலில் இசையமைப்பாளர் MM கீரவாணி மற்றும் நாட்டு நாட்டு ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷன் பாடலாசிரியர் சந்திரபோஸ் இருவரும் இந்த விருதை பெற்றுக் கொண்டனர்.