''எங்கெங்கு காணினும் சக்தியடா’’ என்று தொடங்கும் பாரதிதாசன் கவிதை மீம்ஸ் கிரியேட்டர்களின் கண்ணில் பட்டால், வடிவேலுவின் எக்ஸ்பிர்ஷனுடன் எங்கெங்கு காணினும் கொரோனாவடா என்ற கேப்ஷனுடன் ஒரு மீம்ஸை உருவாக்கிவிடுவார்கள். அந்தளவுக்கு அனைத்து தரப்பு மக்களையும் கொரோனா பாடாய்ப்படுத்தி எடுக்கிறது. அதிகம் வீடு தங்காதவர்களைக் கூட ஆணியடித்து வீட்டில் உட்கார வைத்துள்ளது. அதிலும் சதாசர்வ காலம் சுற்றுலாவில் இருக்கும் நபர்களுக்கும், உள்ளூரிலியே சற்று உலா செல்லும் நபர்களுக்கும் இந்த ஊரடங்கு உத்தரவு சோர்வடையச் செய்துள்ளது. ஆனாலும் எதைவிடவும் உயிர்தான் முக்கியம் என்ற நிலமையால் வீட்டுக்குள் பத்திரமாக சுய கட்டுப்பாட்டுடன் குவாரண்டைன் ஆகியுள்ளனர் பொதுஜனங்கள்.
இந்நிலையில் எப்போதும் பிஸியாக உழைக்கும் திரைத்துறையினருக்கும் இந்த நீண்ட ஓய்வு அவசியமாகியிருக்கிறது. பல நடிகர்கள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் ஓய்வாக நேரத்தை செலவழித்து வருகின்றனர். மேலும் தங்களுடைய ரசிகர்களை சோஷியல் மீடியா மூலம் சந்தித்து அவர்களின் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்தும் வருகின்றனர்.
மென்மையான ஹீரோ, கொடூர வில்லன், அசத்தலான கேரக்டர் ரோல் என எந்தக் கதாபாத்திரத்திலும் பளிச்சென்று தெரியும் ஒரு நடிகர் பிரசன்னா சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர். அவர் சமீபத்தில் தன் ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார். அதில் தனுஷ் ரசிகர் ஒருவர், ''ப்ரோ, எங்க தனுஷ் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்களேன்’’ என்று கேள்வி கேட்க, அதற்கு பிரசன்னா ''டார்லிங்'' என்று பதிலளித்துள்ளார். இந்த பதிலை தனுஷ் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இன்னொரு கேள்வியில் பிரசன்னாவின் ரசிகர் அவரிடம், ''மறுபடியும் ஹீரோவா எப்ப நீங்க நடிக்கப் போறீங்கன்னு காத்திருக்கேன். ஒரு ஸ்டைலான காமெடி ரோல், அல்லது சாகஸமான ஒரு ஸ்கிரிப்ட்டில் உங்களைப் பார்க்க ஆசைப்படறேன். எப்ப பண்ணப் போறீங்க’’ என்று ஆவலுடன் கேட்டுள்ளார்.
அதற்கு பிரசன்னா, 'நிச்சயமாக மிக விரைவில் ப்ரோ. நானும் அதைத்தான் விரும்பறேன். sideline- பண்ணப்படறது சோர்வாதான் இருக்கு. மறுபடியும் front runner ஆக வேண்டும். நீங்க எல்லாரும் நிச்சயமா ஆதரிப்பீங்கன்னு எனக்குத் தெரியும். விரைவில் சீக்கிரம் வரேன்’ என்று பதிலளித்தார்.