கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆகிய முன்னணி பட நிறுவனங்களின் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர். பி. சவுத்ரி மற்றும் என். வி. பிரசாத் ஆகியோர் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ள படம் காட்ஃபாதர். இந்த திரைப்படத்தை கொனிடேலா சுரேகா வழங்குகிறார்.
மலையாளத்தில் நடிகர் பிரித்வி ராஜ் இயக்கத்தில் வெளியான அரசியல் த்ரில்லர் படம் 'லூசிஃபர்'. இந்த படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்து இருந்தார். மேலும், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் இயக்குனரான பிரித்வி ராஜ் கெஸ்ட் ரோலில் தோன்றி இருந்தார்.
இந்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில்தான் நடிகர் சிரஞ்சீவி நடிக்க, தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்னும் பெயரில் தயாராகி உள்ளது. பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகி இருக்கும் காட்ஃபாதர் திரைப்படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான மோகன் ராஜா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சிரஞ்சீவி, சல்மான் கான் ஆகிய இரண்டு மெகாஸ்டார்களுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சத்யதேவ், சுனில், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுரேஷ் செல்வராஜன் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.
இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துக் கொடுக்க, நடிகர் சல்மான் கான், பணம் எதுவும் பெறவில்லை என்றும், நடிகர் சல்மான் கானுக்கு இப்படத்தின் தயாரிப்பாளார்கள் பணம் கொடுக்க போனபோது ‘கெட் லாஸ்ட்(வேண்டாம் போயிடுங்க)’ என்று சொல்லிவிட்டதாகவும் நடிகர் சிரஞ்சீவி, மும்பையில் நடந்த காட்ஃபாதர் பட ப்ரொமோஷன் விழாவில் குறிப்பிட்டுள்ளார்.
இதே விழாவில் நடிகர் சல்மான் கான் பேசியபோது, “எல்லாரும் ரூ300-400 கோடி குறித்து பேசுகிறார்கள். உண்மையில் பாலிவுட் மற்றும் தென்னிந்திய நட்சத்திரங்கள் ஒன்றிணைந்தால் அவர்களின் பட வசூல் ரூ.3000-4000 கோடி வரை தொடும். அதுமட்டுமல்லாமல், அதிக ரசிகர்ககளிடமும் படம் ரீச் ஆகும், ஹாலிவுட் போக வேண்டும் என்று விரும்புவதைவிட, நான் தென்னிந்தியாவிற்கு போகவே விரும்புகிறேன். கற்பனை செய்து பாருங்கள். அனைவரும் சேர்ந்து பணிபுரிந்தால், ரசிகர்கள் அதிகமாக இருப்பார்கள் அல்லவா? சிரஞ்சீவி படத்தை என் ரசிகர்களும், சிரஞ்சீவி ரசிகர்கள் என் படத்தையும் பார்ப்பார்கள். இப்படி ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சிரஞ்சீவியின் மாஸ் திரைப்படமான காட்ஃபாதர், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி பதிப்புகளில் அக்டோபர் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் அதே சமயம், தமிழகத்தில் நாளை ( அக்டோபர் 5-ஆம் தேதி) வெளியாகாது என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. ட்விட்டரிலும் ரசிகர்கள் இதுகுறித்து பேசிவருகின்றனர்.