நடிகர் சந்தானம் நடிப்பில் ஆர்.கே.என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள திரைப்படம் ‘சபாபதி’.
ஆர்.ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் சந்தானம், திக்கு வாயால் அவதிப்படும் வாலிபராக நடித்துள்ளார். திக்கு வாயால் தன் வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்களில் இருந்து ஒருவர் மீண்டு வரும் நகைச்சுவை கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது.
எம்.எஸ்.பாஸ்கர், பிரீதி வர்மா, சாயாஜி ஷிண்டே, ‘விஜய் டிவி’ புகழ், சுவாமிநாதன், ‘காமெடி பஜார்’ மாறன் உள்ளிட்டோர் ‘சபாபதி’ படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் சண்டைக் காட்சிகளை ஹரி தினேஷ் வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவை பாஸ்கர் ஆறுமுகம் கவனிக்க, படத்தொகுப்பை லியோ ஜான் பால் கையாண்டுள்ளார்.
இந்நிலையில் இப்படம் குறித்த பிரஸ் மீட்டில் பேசிய சந்தானம், “நீங்கள் இந்து மதத்தை தூக்கி காட்டுங்கள் அல்லது எதை பிடித்திருக்கோ அதை தூக்கி காட்டுங்கள். ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி காட்டாதீர்கள். உதாரணமாக இந்து மதம் சூப்பர் என்று உயர்த்தி பேசலாம், ஆனால் கிறிஸ்தவம் தவறு.. அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று பேசக்கூடாது.
ஜெய்பீம் படமாக இருந்தாலும் சரி, எந்த படமாக இருந்தாலும் சரி, நாம் ஏதோ ஒரு கருத்து பற்றி பேசுகிறோம் என்றால் அது உயர்ந்தது.. சூப்பர் என்று என்ன வேண்டுமானாலும் நாம் பேசிக் கொள்ளலாம்.
இது நமக்கு சரி என்று தோன்றும் கருத்தை நாம் உயர்த்திப் பேசலாம், அடுத்தவர்களை புண்படுத்தும் வகையில் அவர்களை அமுக்கி பேசக்கூடாது. அது தேவையில்லாத விஷயம். ஏனென்றால் சினிமா என்பது இரண்டு மணி நேரம் திரையரங்குகளில் எல்லாம் மதம் மற்றும் ஜாதிக்காரர்களும் ஒன்றாக அமர்ந்து நேரம் செலவிட்டு பார்க்க வேண்டுமென்று வருகிறார்கள். அங்கு இது தேவைப்படாத ஒரு விஷயம்.
எந்த மாதிரி ஆட்கள், சமூகத்தில் எந்த மாதிரி ஜாதியை வைத்து படம் எடுத்தாலும் சரி எப்படி படம் எடுத்தாலும் சரி, திரையரங்குகளில் சென்று பார்க்க கூடிய மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எனினும் அனைவரும் சொல்வது போல், யாரை வேணாலும் உயர்த்தி பேசிக் கொள்ளுங்கள் ஆனால் யாரையும் தாழ்த்திப் பேசாதீர்கள். அது தவிர்க்கப்படலாம்!” என்று கூறினார்.
மேலும் சபாபதி திரைப்படம் பற்றி பேசிய சந்தானம், “நேரடியாக சொல்ல வேண்டுமென்றால்... சபாபதி திரைப் படத்துக்கு டப்பிங் பண்ணும்போது எனக்கு தலை வலிக்க ஆரம்பித்தது. ஆனால் இதையெல்லாம் நாம் சொன்னால் ஓவராக இருக்கும். கமல் சார் எல்லாம் இதைப் பார்த்தால் இந்த ஒரு விஷயம் பண்ணிவிட்டு இப்படியா? என்று கேட்பார்.
நான் இந்த திக்குவாய் கேரக்டருக்கு ஒவ்வொரு வார்த்தையும் அவ்வாறு டப்பிங் பேசும் பொழுது நரம்புகள் சிரமப்பட்டன. கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் நமக்கு முன்னாடி இதையெல்லாம் செய்த லிஜெண்டுகள் இருக்கிறார்கள். அவர்களை பார்க்கும் பொழுது நான் செய்ததெல்லாம் ஒன்றுமே கிடையாது. என்னளவில் எனக்கு கஷ்டமாக இருந்தது. நான் டப்பிங் முடிந்து நான்கு நாள் மருத்துவமனைக்கு சென்று இந்த நரம்புகளுக்கான மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன்.
அதன் பிறகுதான் தெரிந்தது, உண்மையில் இப்படியான ஆட்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள். எவ்வளவு வலி மற்றும் வேதனை அவர்களுக்குள் இருக்கும் என்று. சபாபதி அவர்களுக்கான படமாக இருக்கும் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ” என்று பேசியுள்ளார்.
நவம்பர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாகும்‘சபாபதி’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலர்ஸ் டிவி கைப்பற்றியுள்ளது.